தமிழகத்தில் 300
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில்
போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித்
தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல ஆண்டுதோறும்
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வரும்
நிலையில், இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளன.
ஆனால், உயர்நிலைப்
பள்ளிகளை பொருத்தவரை 300 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இதுவரை
நியமிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஓய்வு பெறும்
தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் அல்லது பணியில் இறந்துபோனால் ஏற்படும்
பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவார்கள். கடந்த ஆண்டு இது போல ஏற்பட்ட
பணியிடங்களை டிசம்பர் மாதம் தான் நிரப்பினர்.
இந்த ஆண்டு தலைமை
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் வரை கணக்கெடுப்பு
நடத்தி, ஜூலை மாதம் கவுன்சலிங் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் 300
பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணி ஆணைகள்
வழங்கப்படவில்லை. பள்ளிகள் திறந்து முதல் பருவத் தேர்வுகள் முடிந்து
இரண்டாம் பருவம் தொடங்கிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைப்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை எழுத
வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களை தேர்வுக்கு தயார் படுத்த தலைமை
ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
தலைமை ஆசிரியர்
நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு முடிந்து எப்போது தலைமை
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும் தெளிவாக்கவில்லை. வரும்
டிசம்பர் மாதத்திலாவது பணி நியமன ஆணைகள் வழங்கினால் பொதுத் தேர்வுக்கு
மாணவர்களை தயார் செய்ய முடியும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.







