பணித் தகுதிச்சான்று பெறுவதற்கான, தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி,
ஆறு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எவ்வித வேலைக்கும் செல்ல
முடியாமல், நாடு முழுவதும் 52 ஆயிரம் கலை ஆசிரியர்கள் திண்டாடி
வருகின்றனர்.பள்ளிகளில், முக்கிய பாடங்களோடு
சேர்த்து, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கும்,
பாடத்திட்டம், நேர அட்டவணை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில், பகுதிநேர கலை ஆசிரியர்கள் வாயிலாக, சிறப்பு
பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இந்த கலையாசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும், அரசு
தொழில்நுட்ப தேர்வை நடத்தி வருகிறது. இதற்கு, ஜூலை மாதம் அறிவிப்பு
வெளியாகி, நவம்பரில் தேர்வு நடத்தப்படும். இருப்பினும், கடந்த 2013 ம்
ஆண்டுக்கான அரசு தொழில்நுட்ப தேர்வு நடத்தப்படவில்லை.
ஆசிரியர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின், 2014 மே மாதமே
நடத்தப்பட்டது. இத்தேர்வை நாடு முழுவதும் 52,548 பேர் எழுதினர். தேர்வு
முடிந்து, ஐந்து மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. தவிர,
நடப்பாண்டுக்கான தேர்வுகள், வரும் நவம்பர் நடத்த வேண்டும். இன்னும்
அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த அரசு தொழில்நுட்ப தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளிக்கல்வி
துறை சார்பில், மூன்று மாத கால அளவில், தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி
அளிக்கப்படும். இப்பயிற்சியில் வெற்றி பெற்றவர்களால்தான், அரசு, அரசு
உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிய முடியும். ஆனால், தொழில்
ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியானது, கடந்த 2007ம் ஆண்டு முதல், எவ்வித
அறிவிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆண்டுதோறும் அரசு தொழில்நுட்ப தேர்வில், வெற்றியடைந்தும்
பள்ளிகளில் பணிபுரிய முடியாமல், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
காத்திருக்கின்றனர். தேர்வில் வெற்றி பெற்றும் தனியார் பள்ளிகளில் கூட,
பணிபுரிய முடியாததால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்
அளித்துள்ளனர்.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார்
கூறுகையில், &'&'அரசு தொழில்நுட்பத் தேர்வில், வெற்றி பெற்ற கலை
ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையால் அளிக்கப்படும் தொழில்
ஆசிரியர்களுக்கான பயிற்சியில், வேதியியல், உளவியல் பாடங்களும் சேர்த்து
கற்பிக்கப்படும்.
மூன்று மாத பயிற்சிக்கு பின் தேர்வு நடத்தி, தேர்ச்சி பெற்றோருக்கு,
பணித்தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் உடையவர்களே, பள்ளிகளில்
பணிபுரிய முடியும். பள்ளிக் கல்வித்துறை தற்போது பயிற்சியை நிறுத்தி
வைத்துள்ளதால், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், எவ்வித வேலைக்கும்
செல்ல முடியாமல் காத்திருக்கிறார்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், தொழில் ஆசிரியர் பயிற்சி சான்று
இருந்தால்தான், பதிவுசெய்ய முடியும். இதனால், பதிவு மூப்பு அடிப்படையிலான
அரசு வேலைக்கும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில்
அதிகாரிகள் தலையிட்டு, பயிற்சி வகுப்பு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”
என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, &'&'தொழில் ஆசிரியர்
சான்றிதழ் பயிற்சி குறித்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.







