சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., (மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 600க்கும்
மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 24ம்
தேதி நடந்தது. இதை, நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இதன் முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
தேர்வில், 15 ஆயிரம் பேர், முதன்மை தேர்வுக்குதேர்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 2,000த்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இதில் 600க்கும்
அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில்
225 பேர் எழுதியதில், 60க்கும் மேற்பட்டோர், முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி
பெற்றிருப்பதாக, மைய வட்டாரம் நேற்று தெரிவித்தது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், டிசம்பர் 14ம் தேதி நடக்கும் முதன்மை தேர்வுக்கு, யு.பி.எஸ்.சி., இணையதளம் வழியாக, (www.upsc.gov.in) நவம்பர் 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.







