சென்னை
பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் ஏற்படும் குளறுபடியால் உரிய நேரத்தில் ஹால்
டிக்கெட் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சென்னை பல்கலைக்கழக
தொலை தூர கல்வியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு கல்வி
கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் உள்ளிட்டவைகள் கடிதம் மூலம்
தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அந்த முறையை ஏறக்குறைய சென்னை
பல்கலைக் கழகம் கைவிட்டுவிட்டது என்றே தெரிகிறது.
மேலும்,
தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு மையத்தில் வாங்கினர். இதனால், மாணவர்கள்
அலைச்சல் இல்லாமல் இருந்தனர். ஆனால், தற்போது ஹால் டிக்கெட் ஆன்லைனில்
டவுன்லோட் செய்யும் வசதியை பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆன்லைனில்
ஹால்டிக்கெட் பெறுவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக கிராம மற்றும் வெளி
மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக தற்காலிக
ஊழியர்களை வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பணிகளின் காரணமாக மாணவர்களுக்கு
ஹால்டிக்கெட் கிடைப்பதில்லை. குறிப்பாக, சரியான தகவல்களை அளிக்கவும் என்று
கேட்கிறது. எத்தனை முறை சரியான தகவல்களை அளித்தாலும் ஹால்டிக்கெட்
கிடைப்பதில்லை. இது குறித்து பல்கலை கழகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று
கேட்டால், ஒரு எழுத்து மாறிவிட்டிருக்கிறது என்று சர்வசாதாரணமாக
கூறுகின்றனர். பின்னர், உரிய விண்ணப்பம் வாங்கிக் கொண்டு கடிதம்
தருகின்றனர். இதனால், மாணவர்களுக்கு நேரம் மற்றும் பணம் தேவையில்லாமல்
வீணாகிறது. மேலும், இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்,
மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை தபால் மூலம் அனுப்பப்படுவதில்லை. அதுபற்றி
கேட்டால், நீங்கள் ஆண்டு கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என
கூறுகிறார்கள். கட்டணத்தை கட்டிவிட்டோம் என கூறினால், கட்டியதற்காக வங்கி
செலானை கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர்கள்
கூறுகின்றனர். இதற்கு முழு காரணம் பல்கலைக்கழக ஊழியர்களே என அங்கு வேலை
பார்க்கும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுபற்றி அதிகாரி
ஒருவரிடம் கேட்டபோது, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான
மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவர்களின் முழு விவரத்தை கம்ப்யூட்டரில்
பதிவு செய்யவேண்டும். அதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்
அவசரம் காரணமாக தவறாக பதிவு செய்து விடுகின்றனர். உதாரணத்துக்கு, கே.331
என்ற எண் மாணவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், அவசரத்தில் எல்.331
என பதிவு செய்வார்கள். இதனால், ஹால் டிக்கெட் எடுக்க ஆன்லைனில்
பார்க்கும்போது, அவரது பெயர் இடம்பெறாமல் போய்விடும். இதுபோல் தினமும் பல
மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். ஆன்லைன் பதிவில்
குளறுபடி செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள்தான்
முன்வரவேண்டும். நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றார்.