அனைத்து அரசுப்
பள்ளிகளிலும் ஆசிரியர், மாணவர்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராவை
பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.திருவள்ளூர் ரயில்
நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத்
தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உதயசூரியன்,
செந்தில்வளவன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரவாயல் கணினி
ஆசிரியை மாணவனால் தாக்கப்பட்ட சம்பவம், சென்னை லயோலா பள்ளி ஆசிரியர் மீது
நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை கண்டிப்பது, பாதிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது, நிவாரணமாக ரூ. 5
லட்சம் வழங்குதல், அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்துதல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சங்க நிர்வாகிகள் ஜம்பு, ஞானசேகரன், செல்வகுமாரி, ஏழுமலை, பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.