கல்லூரியை
மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.எஸ்.ஐ. மாணவர்கள் 7-வது நாளாக நேற்று
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மூடப்படுவதை தடுக்கவேண்டும்
என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிசென்னை
கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் முதுகலை மாணவர்கள் 38
பேரும், இளங்கலை மாணவர்கள் 191 பேரும் படித்து வருகின்றனர்.
மருத்துவக்கல்லூரிகளை தொடர்ந்து நடத்த போவதில்லை என்று தொழிலாளர்
காப்புறுதி திட்ட கழகம் சமீபத்தில் அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு
தெரிவித்தும், கல்லூரியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும்
கடந்த 18-ந்தேதி முதல் மாணவர்கள் பல்வேறு கட்டமாக போராட்டங்களில் ஈடுபட்டு
வருகிறார்கள். 7-வது நாளான நேற்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில்
இருந்தபடியே அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் முதுகலை மாணவர்கள் மற்றும் இளங்கலை மாணவர்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்கள் போராட்டம் தீவிரம்இதுகுறித்து
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் சஞ்சய் கூறுகையில், “ கல்லூரி
மூடுவதாக கூறப்படும் அறிவிப்பில் நிலைப்பாடு என்ன என்பதை ஈ.எஸ்.ஐ.
இயக்குனர் ஜெனரல் எங்களிடம் நேரடியாக அறிவிக்கவேண்டும். அதுவரையிலும்
நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டேதான் இருப்போம்” என்றார்.மாணவர்களின் போராட்டம் தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர்
அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (ஈ.எஸ்.ஐ.) சார்பில் சென்னை உள்பட நாடு
முழுவதும் நடத்தப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளை நிரந்தரமாக மூட
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து
சென்னையில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவக்கல்லூரியில்
பயிலும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. கல்லூரியில்
இப்போது பயிலும் மாணவர்கள் அவர்களின் படிப்பை முடிக்கும் வரையில் அவை
செயல்படும்; அதன்பிறகு தான் மூடப்படும் என்பதால் மாணவர்களுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாது என்பதையே ஈ.எஸ்.ஐ. நிர்வாகம் மீண்டும், மீண்டும் கூறி
வருகிறது. இந்த விளக்கம் மாணவர்களுக்கு சிறிதும் திருப்தியளிக்கவில்லை.மாற்று நடவடிக்கைசென்னையில்
உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை நடத்துவது குறித்து தமிழக அரசுடன்
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நேரடியாக பேச்சு
நடத்த வேண்டும். ஒருவேளை தமிழக அரசு ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை ஏற்று
நடத்த முன்வராவிட்டால் மாற்று நடவடிக்கைகளை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம்
ஆராய வேண்டும். இன்றைய சூழலில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி
மருத்துவக் கல்லூரிகளை மூடுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.