சித்த மருத்துவத் துறையில் கடந்த
பத்தாண்டுகளாக நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மத்திய,
மாநில அளவில் சித்த மருத்துவத் துறை சார்ந்த முன்னேற்றப் பணிகளில் தொய்வு
ஏற்பட்டுள்ளது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சித்த மருத்துவத் துறையானது இந்திய
மருத்துவம், ஹோமியோபதி இயக்ககத்தின் கீழ் செயல்படுகிறது. சித்த மருத்துவத்
துறையின் சார்பில் சென்னை, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் சித்த
மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு கல்லூரிகளின்
முதல்வர் பணியிடங்கள், சென்னை அண்ணா சித்த மருத்துவக் கல்லூரியில்
கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி உள்ளிட்டப் பணியிடங்கள் பல
ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இரண்டு கல்லூரிகளிலும் 14 பேராசிரியர்கள், ஒரு
விரிவுரையாளர், 13 உதவி விரிவுரையாளர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் தொடர்ந்து
பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
சித்த மருத்துவத் துறைக்கான இணை இயக்குநர் பதவி உள்ளிட்ட இரண்டாம் நிலை பணியாளர்கள் இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
பணி மூப்பு பட்டியல்: கல்லூரி, மருத்துவமனை இரண்டு
தரப்பிலும் பணியாற்றுபவர்களுக்கான பணி மூப்பு பட்டியல் ஒவ்வொரு ஆண்டும்
தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்ப வேண்டும்.
அதன் அடிப்படையில் பதவி உயர்வு குறித்து ஆணை
பிறப்பிக்கப்படும். இந்தப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறாததால் கடந்த
10 ஆண்டுகளாக பல்வேறு பணியிடங்கள் காலியாகவே உள்ளன என, சித்த
மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்டங்களில்... 1985-ஆம் ஆண்டு தமிழகம் 22 வருவாய்
மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும்
ஒரு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தையடுத்து கூடுதலாக 9
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பணியிடங்களை உருவாக்க, தமிழக அரசு கடந்த
2009-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. ஆனால், மொத்தம் 31 பணியிடங்களில் வெறும் 7
மாவட்ட சித்த மருத்துவ அலுவர்களே பணியாற்றி வருகின்றனர்.
பணிகளில் தொய்வு: மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள சித்த
மருத்துவப் பிரிவின் செயல்பாடு, மருந்துகளின் தரம், மருந்துகள் இருப்பு,
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த
அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த அலுவர்கள் தயாரித்து அளிக்கும்
அறிக்கைகளைக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படும். பணிச் சுமையின் காரணமாக
இந்தப் பணிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை எனக்
கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு சித்த மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:
துறைக்குத் தேவையான ஆதரவை தர அரசு தயாராக இருந்தாலும்,
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் உண்மையான நிலை அரசுக்கு தெரிய வருவதில்லை.
இதனால், தேசிய அளவிலும் சித்த மருத்துவத் துறையால் சிறந்து விளங்க
முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.








