பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல்
மூலம் (வாட்ஸ்-அப்) அனுப்பிய விவகாரத்தில் கைதான தனியார் பள்ளி 4
ஆசிரியர்களும் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டனர்.பிளஸ் 2 கணிதத் தேர்வு கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.
ஒசூரில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்வுக் கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டிருந்த ஆசிரியர் மகேந்திரன் அந்த வினாத்தாளை செல்லிடப்பேசியில் படம்
எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலமாக மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பி
வைத்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை
நடத்தி, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன், அவருடன் பணிபுரிந்துவந்த
கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள்
சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை
இரவு மேலும் 4 ஆசிரியர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் பாகலூர் அட்கோ தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப்
பணியாற்றும் வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த வெங்கட்டகவுண்டனூரைச்
சேர்ந்த சஞ்ஜீவ் (25), வாணியம்பாடியைச் சேர்ந்த விமல்ராஜ் (27), ஒசூர்
மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (26), வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த
கவிதா (30) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இரவு முழுவதும்
விசாரணை நடத்தப்பட்டது.
கைதான ஆசிரியர்கள் சஞ்ஜீவ், விமல்ராஜ், மைக்கேல்ராஜ்,
கவிதா ஆகிய 4 பேரும் சனிக்கிழமை பிற்பகல் ஒசூர் இரண்டாவது நீதித் துறை
நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை
ஏப்ரல் 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சஞ்ஜீவ், விமல்ராஜ்,
மைக்கேல்ராஜ் ஆகிய 3 பேரும் சேலம் மத்தியச் சிறையிலும், ஆசிரியை கவிதா
கிருஷ்ணகிரி பெண்களுக்கான கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.