வாட்ஸ் அப்பில் வினாத்தாள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிளஸ்-2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் நேற்று வந்தார். தர்மபுரி பகுதியில் 5 தனியார் பள்ளிகள், சில அரசு பள்ளிகளில் அவர் ஆய்வு செய்தார். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் அவர் ஆய்வு செய்தார்.
5 பேர் பணி இடைநீக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் விசாரணையும், பிளஸ்-2 தேர்வுகளும் முடிந்த பிறகு கல்வித்துறை சார்பில் துறைரீதியாக விசாரணை நடத்தப்படும். ‘வாட்ஸ் அப்’ மூலம் வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர்களுக்கு உதவி செய்த ஆசிரியர்கள், அதிகாரிகள் பற்றிய விவரம் தெரியவில்லை. போலீசார் விசாரணை முடிந்த பின்னர் தான் அது தெரியவரும்.
சரியான உத்தரவு இல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றியது குறித்தும், ஆள்மாறாட்டம் நடந்ததா? என்பது குறித்தும் கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தது தொடர்பாக ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகன் தன்ராஜ், மற்றும் 4 பேர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 5 பேரின் பெயர் விவரம் வருமாறு:-
1. வேதகன் தன்ராஜ் (ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்)
2. சந்திரசேகர் (கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர்)
3. மாது (புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்)
4. ரமணாராஜன் (ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர்)
5. அசோக்குமார் (முதன்மை கல்வி அலுவலக உதவியாளர்)
35 பேர் கைது
ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி உள்பட சில பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வு மையங்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பிளஸ்-2 தேர்வுக்காக 35 சிறப்பு பறக்கும் படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஓசூரில் அந்த பள்ளி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பள்ளியை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் 3 பேர் மாற்றம்
சேலம் மாவட்டத்தில் சேலத்தில் ஒரு தனியார் பள்ளி மற்றும் மேட்டூரில் 2 தனியார் பள்ளிகளில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட 3 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கருதியதால் அவர்கள் மாற்றப்பட்டதாக முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.








