‘பட்ஜெட்’ கூட்டம்
சென்னை மாநகராட்சியின் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மேயர் சைதை துரைசாமி தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
கூட்டத்தில், மேயர் சைதை துரைசாமி 2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’டை தாக்கல் செய்தார். ‘பட்ஜெட்’டில் துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம் வருமாறு:-
சாலைகள்-பாலங்கள்
* சென்னை மாநகரின் பேருந்து வழித்தடங்களின் மேம்பாடு, பேருந்து சாலைப் பணிகள், தமிழக அரசால் அளிக்கப்படும் மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான பணிகள், உட்புற தார் சாலைகள் மேம்பாடும், சிமென்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இதர பணிகள் என மொத்தம் ரூ.1,232 கோடி நிதி ஒதுக்கீடு.
* புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
பழுதுபார்த்தல், பராமரிப்பு- மூலதன பணி
* பழுதுபார்த்தல், பராமரிப்பு, இயக்க செலவுகள், திட்ட செலவுகள் மற்றும் சாலை வெட்டுகளை சிறந்த முறையில் சீரமைப்பதற்காக ரூ.630.01 கோடி நிதி ஒதுக்கீடு.
* மூலதனப் பணிகளை மேற்கொள்வதற்காக கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டிக்காக ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு.
* நிர்வாக செலவுக்காக ரூ.118.32 கோடி நிதி ஒதுக்கீடு.
மின்சாரம்- மழைநீர்வடிகால்வாய்கள்
* ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்காக ரூ.30 கோடியும், உலக வங்கி நிதி உதவியுடன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக ரூ.300 கோடியும், இதர பணிகளுக்காக ரூ.20 கோடியும் நிதி ஒதுக்கீடு.
* சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் புதிய தெரு மின் விளக்குக் கம்பங்கள் அமைத்தல், மின் சக்தியை சேமிக்கும் பொருட்டு எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல், தெருவிளக்கு கண்காணிப்பு முறை மற்றும் இதர பணிகளுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
திடக்கழிவு மேலாண்மை- இயந்திர பொறியியல்
* சென்னை பெருநகரின் துப்புரவு பணிக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல், மண்டல இயக்கூர்தி நிலையங்களுக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்தல் போன்றவற்றிற்காக ஒவ்வொரு வட்டார அலுவலகத்துக்கும் தலா ரூ.5 கோடி வீதம் 3 வட்டார அலுவலகத்துக்கும் ரூ.15கோடி நிதி ஒதுக்கீடு.
* ஆய்வு வாகனங்கள் கொள்முதல் செய்தல், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு தேவையான லாரி மற்றும் கனரக டிப்பர் வாகனங்கள் கொள்முதல் செய்தல் போன்ற பணிகளுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு.
கட்டிடம்-சிறப்பு திட்டங்கள்
* சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், வார்டு மற்றும் மன்ற உறுப்பினர் அலுவலகங்கள், வாகன இயக்கு கூர்தி நிலையங்கள் கட்டுதல், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளுக்காக ரூ.122 கோடி நிதி ஒதுக்கீடு.
* மெரினா கடற்கரையை ஒட்டிய சாலை பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள் அமைத்தல், நடைதொடர் மேம்பாலம் அமைத்தல், நவீன முறையில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு திட்டங்களுக்காக ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
கல்வி-சுகாதாரம், குடும்ப நலம்
* சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர் அறைகள் அமைத்தல், சாய்வு மேஜைகள், ஆய்வக உபகரணங்கள் வாங்குதல், பள்ளிகளுக்கு தேவையான கணிப்பொறி மற்றும் அதன் துணை உபகரணங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.
* பரிசோதனை கூட உபகரணங்கள், புகைபரப்பும் எந்திரங்கள் மற்றும் பொது மக்களின் சுகாதார மேம்பாடு தொடர்புடைய பிற பணிகளை மேற்கொள்ள ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் வாங்குதல், ஆய்வு வாகனங்கள் வாங்குதல், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மகப்பேறு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
பூங்கா மற்றும்விளையாட்டு திடல்
* சென்னை மாநகராட்சியின் திறந்தவெளி நிலங்களில் புதிய பூங்காக்களை உருவாக்குதல், புதிய விளையாட்டு திடல்கள் உருவாக்குதல், ஏற்கனவே உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுதிடல் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வட்டார அலுவலகத்துக்கும் ரூ.30 கோடி வீதம் 3 வட்டார அலுவலகத்துக்கும் ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
மேற்கண்டவாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.








