பி.இ. படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.இந்தத் தேர்வுடன் பொறியியல் படிப்பில் சேருவதற்கான
முக்கியப் பாடத் தேர்வுகள் முடிவு பெறுகின்றன. எம்.பி.பி.எஸ். படிப்பில்
சேருவதற்கான முக்கியப் பாடத்தேர்வுகள் பிளஸ் 2 இறுதித் தேர்வான உயிரியல்
பாடத் தேர்வுடன் மார்ச் 31-ஆம் தேதி முடிவடைகிறது.பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது.
வழக்கமாக, கடைசியாக நடைபெறும் கணினி அறிவியல் தேர்வு இந்த ஆண்டு முக்கியப்
பாடத்தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டது.
முக்கியப் பாடத் தேர்வுகள் கணிதத் தேர்வுடன் மார்ச 18-ஆம் தேதி தொடங்கின. வேதியியல் பாடத் தேர்வு மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்றது.
பெரும்பாலான மாணவர்கள் கணிதத் தேர்வு எளிமையாக
இருந்ததாகத் தெரிவித்தனர். வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள்
சற்றுக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பாடத்தில் "ஏ' வரிசை வினாத்தாளில் 10, 22-வது ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கணிதத் தேர்வு எளிமையாகவும், வேதியியல் தேர்வு சற்றுக்
கடினமாகவும் இருந்தது. இந்த நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருக்கும்
என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பி.இ.-எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு
உரிய வேதியியல் தேர்வு காரணமாக குறையும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை இயற்பியல்
தேர்வு ஈடு செய்யும் என மாணவர்கள் கருதுகின்றனர்.