குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
செயலாளர் விஜயகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள காலிப்
பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வுகள், கடந்த ஆண்டு நவம்பரில்
நடைபெற்றன. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் 1:5
என்ற விகிதாச்சார அடிப்படையில் (அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 5
விண்ணப்பதாரர்கள் என்ற விகிதத்தில்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வாணைய அலுவலகத்தில்
வியாழக்கிழமை (மார்ச் 26) தொடங்கியது. இது மே 8-ஆம் தேதி வரை நடைபெறும்.
இதற்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கெனவே
அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி, நேரத்தில்
அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட
ஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆகியவற்றின்
அடிப்படையில் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கப்படுவர் என தனது அறிவிப்பில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.