விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது. இத் தேர்வை மாவட்டத்தில்
52,998 பேர் எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து, மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் வா.சம்பத் பேசியது: தமிழகம்
முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல்
10-ம் தேதி வரை
நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வை 536 பள்ளிகளைச்
சேர்ந்த 26,279 மாணவர்களும், 25,823 மாணவிகளும் எழுதுகின்றனர். இதற்காக 164
தேர்வு
மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க 2,400 அறை
கண்காணிப்பாளர்களும், 323 பறக்கும் படை அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட
உள்ளனர்.
மேலும், தேர்வு நடைபெறும் மையங்களில் இருக்கை வசதி, குடிநீர் வசதி,
கழிவறை, மின்சாரம், பேருந்து வசதி போன்ற வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின்
மூலம் ஏற்பாடு
செய்யப்பட்டு உறுதி செய்ய வேண்டும்.
தேர்வு மையங்கள் அருகே ஒலிப்பெருக்கி அனுமதியை காவல் துறையினர் வழங்கக்
கூடாது. மேலும், தேர்வு மையங்கள் அருகில் ஒலிபெருக்கி இருந்தால் உடனடியாக
அப்புறப்படுத்த வேண்டும்.
மின் பகிர்மான கழகம் மூலம் தேர்வு அறைகளுக்கு மின்சாரம் தடையில்லாமல்
வழங்க வேண்டும். மாணவ, மாணவிகள் தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக
மதிப்பெண்கள் பெற்று வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் எம்.ராஜமாணிக்கம், முதன்மைக் கல்வி
அலுவலரின் நேர்முக உதவியாளர் க.காமராஜ், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த
உதயகுமார்,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக
மேலாளர் (வணிகம்) ஸ்ரீதரன் மற்றும் காவல்துறை, போக்குவரத்து துறை,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள்
பங்கேற்றனர்.







