சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் 5}ஆவது நாள் போராட்டமாக வெள்ளிக்கிழமையன்று கிண்டி, குரோம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பார்வையற்ற பட்டதாரிகள், ஆசிரியர் பணி நியமனம் உள்பட 9
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் சென்னையில் தொடர்
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 7 பேர்
உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களின் உடல்நிலை மோசமானதால், போலீஸார்
வியாழக்கிழமை அவர்களைக் கைது செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கும் அவர்கள் சிகிச்சையை ஏற்க மறுத்து உண்ணாவிரதத்தைத்
தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தில் பங்குபெற்று வரும் மற்ற பார்வையற்ற
பட்டதாரிகள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் சாலை மறியல்
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஐந்தாம் நாள் போராட்டமாக வெள்ளிக்கிழமை காலை கிண்டி
ரேஸ் கோர்ஸ் சாலையில் திடீர் சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால்
அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 55 பெண்கள் உள்பட
70 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோன்று குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் மற்றொரு பிரிவு பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில்
ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் அவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.








