அண்ணா பல்கலைக்கழகத்தில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பசுமை விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த
விவசாயிகளுக்கு இலவசமாக 200 மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.அண்ணா பல்கலைக்கழக வேளாண் பொறியியல் துறையும், "ட்ரீ
பேங்க்' தன்னார்வ அமைப்பும் இணைந்து "கிரீனிக்ஸ் 2015' என்ற பயிலரங்கை
பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்த நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.அவர்களுக்கு இயற்கை விவசாயத்துக்கு உதவும் பூவரசம் மரம்
வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டதோடு, இலவசமாக 200
மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற "ட்ரீ பேங்க்' அமைப்பின் நிர்வாகி ஜி.முல்லைவனம் கூறியதாவது:
நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள், பல்வேறு செயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு விளையும் பொருள்களைச் சாப்பிடுபவர்களின்
உடலுக்கு தீங்குதான் ஏற்படும். மாறாக, விளை நிலத்தில் பூவரச மரங்களை
வளர்ப்பதன் மூலம், எந்தவித செயற்கை உரங்களையும் நம்ப வேண்டியதில்லை.
ஒரு ஏக்கருக்கு 2 பூவரச மரங்கள் இருந்தால் போதுமானது.
இதன் இலைகளை, விளை நிலத்தில் தூவி மண்ணோடு மக்கவைத்தால், சிறந்த உரமாக
மாறிவிடும். இதன்மூலம், முன்பைவிட கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என்றார்.








