கம்ப்யூட்டர் மூலம் இயங்கும் பேஸ்புக், டுவிட்டர், போன்ற பல்வேறு சமூக
வலைத்தளங்களிலும் செல்போன் மூலமாகவும் கருத்துகள் பரிமாறப்படுகின்றன. இதில்
யாராவது ஒருவரைப்பற்றி வெளியாகும் கருத்துகளுக்கு பலர் விருப்பம்
தெரிவிப்பதும், மேலும் அது தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதும் இப்போது
வழக்கமாகிவிட்டது. இதில் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காக, கடந்த
2000–ம் ஆண்டு தகவல் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் 2008–ம் ஆண்டு இந்த சட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு
ஒரு திருத்தம் கொண்டு வந்தது. 2009–ம் ஆண்டு பிப்ரவரி முதல் இது
அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்தம், ‘‘தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்தம்
66 ஏ’’ என்று அழைக்கப்படுகிறது.இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;–
1. யாருக்காவது ஒட்டு மொத்தமாக கோபமூட்டும் அல்லது மனவருத்தம் அளிக்கும் வகையிலும், அல்லது அச்சுறுத்தும் வகையிலும் அனுப்பப்படும் தகவல் –
2. பொய்யானது என்று தெரிந்தும், ஒருவருக்கு குழப்பம், மனவருத்தம், ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், பணிசெய்ய விடாமல் தடுப்பது, அவமதிப்பது, காயப்படுத்துவது, குற்றச் செயலுக்கான மிரட்டல், விரோதம், வெறுப்பு, கெட்ட நோக்கம் ஆகியவை கொண்ட தகவலை கம்ப்யூட்டர் அல்லது வேறு எந்த தகவல் தொடர்பு சாதனம் மூலம் வெளியிடுவது –
3. ஒருவருக்கு மனவருத்தம், அல்லது அசவுகரியம் ஏற்படுத்தும் விதமாக, அல்லது ஏமாற்றுதல், அல்லது தவறாக வழிகாட்டும் விதமாக மின் சாதனம் மூலமாக தகவல் அனுப்புதல் –
மேற்கண்டவை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 2 முதல் 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இந்த சட்டம், 2009–ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டாலும், இந்த சட்டப்படி 2012–ம் ஆண்டுதான் முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2012–ம் ஆண்டு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பற்றி பேஸ்புக்கில் கேலிச் சித்திரம் வரைந்ததற்காக ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டார். இதே போல அரசியல்வாதிகள் பற்றி பேஸ்புக்கில் விமர்சனம் வெளியிட்டதாக மும்பையை சேர்ந்த ஏர் இந்தியா விமான ஊழியர்கள் மயங்க் சர்மா, கே.வி ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2012–ம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்த தொழில் அதிபர் ரவி சீனிவாசன் என்பவர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபோல கடந்த காலங்களில் 10–க்கும் மேற்பட்டவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்தது.
மும்பையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்த போது அங்கு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனை கண்டித்து ஷஹீன் தாதா என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு தகவல் அனுப்பினார். இந்த தகவலுக்கு ரீனு சீனிவாசன் என்ற பெண் ‘லைக்’ போட்டார். இதையொட்டி இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டபோதுதான், இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 11–ம் வகுப்பு சிறுவன், அந்த மாநில மந்திரி ஆசம் கான் பற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.







