அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என, கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
அரசு தொழில்நுட்பத் தேர்வு நடைபெற்று 10 மாதங்கள்
ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதில் ஓவிய ஆசிரியர்
தேர்வில் தேர்வர்கள் பலருக்கு காப்பியடித்ததாகக் கூறி விளக்கம் கேட்டு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதங்கள்
குழப்பம் அளிப்பதாக உள்ளன. காப்பியடித்திருந்தால் அவர்களைத் தேர்வறைகளிலேயே
பிடிக்காமல், பல மாதங்கள் கழித்து கடிதங்கள் அனுப்புவது ஏன் என்று
தெரியவில்லை.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக
தையல், ஓவியம், இசை ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி
நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியை எதிர்பார்த்து 55 ஆயிரம் பேர்
காத்திருக்கின்றனர். எனவே, இந்தப் பயிற்சியை மீண்டும் வழங்க வேண்டும் என்று
அவர் கோரினார்.