மாநிலத்திலேயே முதல் முறையாக,
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த
பயிற்சி, மதுரையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
மனநலத் திட்டத்தின்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த சில
ஆண்டுகளாக செல்லமுத்து அறக்கட்டளை, மாவட்ட நிர்வாகம் இணைந்து, சிறப்பு
முகாம்களை நடத்தி வருகின்றன. இதன்மூலம், மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர்
வரை மனநலப் பாதிப்புக்குள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற
மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதான கால்நடை வளர்ப்புப் பயற்சி அளிக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 3 மாதம் சிறப்புப் பயிற்சி
அளிக்கவும், அதன்பின் பொதுத் துறை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத் தரவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை, கால்நடை வளர்ப்புப்
பயிற்சிக்காக 350 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 60 பேருக்கு
முதல் கட்டமாக 3 மாத சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மூன்று கட்டமாக
அளிக்கப்படும் இந்தப் பயிற்சி, மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள
செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
பயிற்சிக்கு வருவோருக்கு தங்குமிடம், உணவு இலவசமாக
அளிக்கப்படுகிறது. மேலும், மாதம் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்தப்
பயிற்சியை, கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் விஜயகுமார், மாவட்ட மனநலத்
திட்டக் கண்காணிப்பாளர் டாக்டர் சி. ராமசுப்பிரமணியன் ஆகியோர்
அளிக்கின்றனர்.