மாநில பணியாளர்கள் காப்பீட்டுக் கழகங்கள் (இ.எஸ்.ஐ.) மூலம் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றை நடத்தாமல் கைவிடுவது குறித்த திட்டம் குறித்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்கு ஜெயலலிதா மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் கொள்கையாக உள்ளது. தற்போது 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.
இந்த சூழ்நிலையில் இ.எஸ்.ஐ. நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவும், அங்கு மேலும் மாணவர் சேர்க்கை நடத்தாமலும் இருப்பதற்காக திடீரென்று எடுக்கப்பட்டுள்ள கடினமான முடிவு, அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிபந்தனைகள் விதிப்பு
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி 2013-14-ம் ஆண்டில் இருந்து இளங்கலை மருத்துவப் படிப்பில் 100 மாணவர்களையும், 2014-15-ம் கல்வி ஆண்டில் முதுகலைப் படிப்பில் 38 மாணவர்களையும் சேர்த்தது. அதுபோன்ற கல்லூரிக்கான கட்டிடம் கோவையில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான அனுமதி இந்திய மருத்துவக் கவுன்சிலில் நிலுவையில் உள்ளது.
ஆனால் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை, மாணவர்களின் மத்தியில் பதட்டத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் அந்த கல்லூரிகளை நடத்துவதாக இ.எஸ்.ஐ. கூறுகிறது.
சென்னையில் ரூ.494.62 கோடி செலவில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியை நிறுவியுள்ளதாகவும், கோவையில் ரூ.580.57 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கொள்கை அளவில் ஒப்புதல்
இ.எஸ்.ஐ. கூறும் நிபந்தனையின்படி, சென்னை கல்லூரிக்கு ரூ.376.42 கோடியையும், கோவை கல்லூரிக்காக 194.81 கோடியையும், மொத்தம் ரூ.571.23 கோடியை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இரண்டு கல்லூரிகளையும் ஏற்பதற்காக கூறப்படும் தொகை அதிகமாக உள்ளது. மேலும் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கு தமிழகத்துக்கு ரூ.200 கோடிதான் செலவாகும் என்று தமிழக அரசு மதிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டால் அதற்காகும் செலவு ரூ.189 கோடிதான்.
மாணவர்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப்போக்குவதற்காக இரண்டு கல்லூரிகளையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
அரசின் நிபந்தனைகள்
அதன்படி, கல்லூரிகளுக்கான முதலீடான ரூ.571.23 கோடி முதலீட்டை இ.எஸ்.ஐ. ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்லூரிக்கான தொடர் செலவினத்தை தமிழக அரசு அளிக்கும். அங்கு அமையும் ஆஸ்பத்திரிக்கு ஏற்படும் தொடர் செலவில் 87.5 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
அங்குபணியாற்றும் ஊழியர்கள் மாநில அரசு ஊதிய விகிதங்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான சம்பளத்தை தமிழக அரசு வழங்கும். இ.எஸ்.ஐ. கேட்டுக் கொண்டபடி, அந்த ஆஸ்பத்திரிகள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியாக தொடரலாம்.
சீட் ஒதுக்கீடு
தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத சீட்டுகள் மாநில அரசுக்கும், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 20 சதவீதம் இ.எஸ்.ஐ. ஊழியர்களின் வாரிசுகளுக்கும் அளிக்கப்படுகின்றன.
ஆனால் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்ற பிறகு, இந்த ஒதுக்கீட்டை மாற்றி, 85 சதவீத இடங்களை மாநில அரசுக்கும், 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் அளிக்க வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் நிபந்தனைகள்படி, நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவை தமிழக அரசுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு, தமிழக அரசின் நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சரை ஏற்கச் செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








