மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டில் வழக்கு
மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஜெயராஜ், சந்திரன்
ஆகியோர் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனத்துக்கு எதிராக மதுரை
ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில், பல்கலைக்கழக
மானியக்குழு விதிப்படி, பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்க
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க
வேண்டும். கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக மட்டுமே பணியாற்றி உள்ளார்.
பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை. எனவே கல்யாணி மதிவாணனை
துணைவேந்தராக நியமித்தது சரியல்ல. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய
வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,
வி.எம்.வேலுமணி ஆகியோர் கல்யாணி மதிவாணன் பதவி நியமனம் செல்லாது என்றும்
அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கடந்த ஜூன் 26–ந் தேதி
உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து கல்யாணி மதிவாணன் தரப்பில்
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான
விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று சுப்ரீம் கோர்ட்டில்
நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாயா மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய
அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
நியமனம் செல்லும்
இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
கடந்த 2010–ம் ஆண்டு
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மத்திய அரசின் கீழ் இயங்கும்
பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில்
பேராசிரியர்கள் மற்றும் இதர உயர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பான
விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிமுறைகள் மத்திய அரசின் கீழ் இயங்கும்
பல்கலைக்கழகங்களில் கண்டிப்பாக சட்டமாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாநில
அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் இந்த விதிமுறைகளை சட்டமாக
அமல்படுத்துவதை அந்த மாநிலங்களின் விருப்பத்துக்கு விட்டு வைக்கப்பட்டது.
இந்த
யுஜிசி விதிமுறைகளை தமிழக அரசு சட்டமாக அறிவிக்கவில்லை. எனவே, மதுரை
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் இந்த விதிமுறை
கடைப்பிடிக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்படவில்லை. இதன்
அடிப்படையில் தமிழக அரசு கல்யாணி மதிவாணனை மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து வெளியிட்ட அரசாணை செல்லும். இந்த
நியமனத்தை தடை செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவு ரத்து
செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.







