சமுதாயம் நன்றாக இருக்க, வீட்டில் ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளருங்கள்
என்று உலக மகளிர் தின விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மான்போர்ட் சமூக வளர்ச்சி நிறுவனம்
சார்பில், சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அரங்கில் நேற்று உலக
மகளிர் தின விழாவும், சுய உதவிக்குழு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு,
மான்போர்ட் சமூக வளர்ச்சி நிறுவன இயக்குனர் அருட்சகோதரர் பேட்ரிக் தலைமை
தாங்கினார். விழாவில், மான்போர்ட் சமூக வளர்ச்சி நிறுவன உறுப்பினர்கள், சுய
உதவிக்குழு பெண்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
விழாவின்
தொடக்கமாக பேச்சாளர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. அதனைத்
தொடர்ந்து, சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற நடன போட்டியும், ஆடை அலங்கார
போட்டியும், விளையாட்டு போட்டியும் நடந்தது.
மாலையில் போட்டிகளில்
வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை நடிகை ராதிகா சரத்குமார் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:–
பெண்கள் வாழ்ந்து ஜெயிக்க வேண்டும். நான் வரும்போது இந்த நிகழ்ச்சியில்
என்ன பேசலாம் என்று நினைத்தேன். ஜாலியாக பேச வேண்டும் என்றுதான் வந்தேன்.
ஆனால், சங்கடமான ஒரு விஷயத்தைத்தான் உங்களிடம் பேச இருக்கிறேன்.
பாலியல் பலாத்காரம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி
ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக கைது
செய்யப்பட்ட குற்றவாளியின் பேட்டியை இந்திய அரசு தடை விதித்தும் பி.பி.சி.
சேனல் ஒளிபரப்பியது.
பேட்டியில் குற்றவாளி, அந்த பெண் இரவு 8 மணிக்கு
மேல் ஏன் வெளியே வந்தார். அவர் ஆடை அணிந்திருந்த விதம் என்னை பாலியல்
பலாத்காரம் செய்ய தூண்டியது என்று கூறியுள்ளார். அவருக்கு உரிய தண்டனையை
கடவுளும், கோர்ட்டும் விதிக்கட்டும்.
ஆண் பிள்ளைகள்
குற்றவாளியின் வக்கீல்கூட, எனக்கு இப்படியொரு மகள் இருந்தால்
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்த மாணவியின்
தாயாரோ, சொத்தை விற்று எங்கள் மகளை டாக்டருக்கு படிக்க வைத்தோம். ஆனால்,
அவளுக்கு இப்படி ஆகிவிட்டது. மற்ற பெண்களுக்கு எனது மகள் வாழ்க்கை பாடமாக
இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நான் உங்களிடம் கேட்டு
கொள்வதெல்லாம், உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகளை போல ஆண் பிள்ளைகளை ஒழுங்காக
வளருங்கள். பிள்ளைகளை நன்றாக வளர்ப்பது நம் கையில்தான் உள்ளது. இரவில்
வீட்டிற்கு தாமதமாக மகன் வந்தால், ஏன்? என்று கேளுங்கள். ஆண் பிள்ளைகளை
நன்றாக வளர்த்தால் தாய் குலத்திற்குத்தான் வெற்றி. பிள்ளைகளை நன்றாக
வளர்ப்பது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் நிரந்தர சொத்து. அப்போதுதான்
சமுதாயம் நன்றாக இருக்கும்.
இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில், சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நன்றி தினத்தந்தி







