வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும்
திட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென, கலெக்டர்
சுரேஷ்குமார் பேசினார்.தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை
செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தொடர்பாக அனைத்து
கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கடலூர் முகாம் அலுவலகத்தில் நடந்தது.
ஆர்.டி.ஓ., ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை தாசில்தார் பாலாஜி
முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சுரேஷ்குமார்
தலைமை தாங்கி பேசியதாவது: தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை
செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் நோக்கம் 100
சதவீதம் குறைபாடுகள் இன்றி வாக்காளர் பட்டியலை தயார் செய்வதாகும்.
பட்டியலில் பெயர், முகவரி, உறவின் முறை சரியாக இருக்கும்.இதில், சிலவற்றில்
குறைபாடுகள் உள்ளது. இதனை இத்திட்டத்தில் சரி செய்து கொள்ளலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்களை நீக்க முடியும். ஆதார் எண்,
வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினரின் தொலைபேசி, மொபைல் எண், மின்னஞ்சல்
முகவரியை இணைக்க வேண்டும்.இதனை பதிவு செய்ய வசதியாக தமிழகத்தில் வேறு
எங்கும் இல்லாமல் முதன் முதலாக வாக்காளர் விவரச் சீட்டுடன் கூடிய
விண்ணப்பப் படிவம் கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படும். விவரங்களை
உறுதிப்படுத்தும் திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் சுரேஷ்குமார் பேசினார்.
கூட்டத்தில்,
தாசில்தார்கள் சிவா, பன்னீர்செல்வம், அ.தி.மு.க., நகர செயலர் குமரன்,
தி.மு.க., இலக்கிய அணி மாவட்டச் செயலர் நாராயணசாமி, தே.மு.தி.க.,
சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூ., மாவட்டச் செயலர் சேகர், மா.கம்யூ., மாவட்ட
செயற்குழு உறுப்பினர் மாதவன், காங்., நகரத் தலைவர் குமார், பகுஜன் சமாஜ்
மாவட்டத் தலைவர் செந்தில்முருகன் பங்கேற்றனர்.நன்றி தினமலர்