கைதான ஆசிரியர்களிடம் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முறைகேடுக்கு உடந்தையாக இருக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட பணப்பரிமாற்றம், உடந்தையாக இருந்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை 4 பேரும் வாக்குமூலமாக அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் மட்டுமின்றி அதே பள்ளியை சேர்ந்த மேலும் சில ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 அல்லது 8 நபர்கள் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் கட்டமாக கூடுதல் தனிப்படைகள் அமைத்து தொடர்புடைய மற்ற ஆசிரியர்களையும் கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையறிந்த அந்த ஆசிரியர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நெருக்கடியில் போலீசார்
வாட்ஸ் அப்பில் கணக்கு தாள் வெளியான சம்பவத்தால் மாணவி ஒருவர் மறு தேர்வு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரம் சென்று விட்டதால் முழுமையான விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியவேண்டிய கட்டாயம் ஏற்ப டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. அதற்குள் விசாரணை நடத்தி அரசுக்கும் அறிக்கை தரவேண்டிய நிலை உருவாகியுள்ளது. தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் தனியார் பள்ளி முறைகேடு குறித்தும் எதிர்கட்சிகள் பேச வாய்ப்புள்ளதால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்யவேண்டிய கட்டாயம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.DINAKARAN