மத்திய அரசின் புதிய கல்விக்
கொள்கை, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திகழும்
என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
தெரிவித்தார். தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி தலைமையில் மாநில கல்வித்துறை அமைச்சர்கள், செயலாளர்களின்
கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசுகையில், ஸ்மிருதி இரானி இவ்வாறு
தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், புதியக் கல்விக்
கொள்கையை வகுப்பது தொடர்பான கலந்தாலோசனை, டிசம்பர் மாதத்துக்குள்
நிறைவடைந்து விடும் என்றும், அதன்பிறகு புதிய கல்விக் கொள்கை தொடர்பான
வரைவு அறிக்கை, சம்பந்தப்பட்ட தரப்பினர், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு
முன்பு வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். புதிய கல்விக் கொள்கை குறித்து
கிராம அளவில் 25 லட்சம் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது என்றும்
அவர்கள் கூறினர்.
இந்தக் கூட்டத்தில், பத்தாம் வகுப்பு வாரியத்தை
நீக்குவதால், மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுமா? என்பது
உள்பட கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து
ஆலோசிக்கப்பட்டது.
தாய்மொழி மற்றும் பல மொழிகளில் பாடம் கற்றுத்தருவதை
ஊக்குவிப்பது குறித்தும், அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்படும்
இடர்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குடியரசுத் தினத்தன்று, புதிய கல்விக் கொள்கையை
உருவாக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அந்த கொள்கையை
உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது. இதை
கண்காணிப்பதற்கு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.








