பார்வையற்றோர் ‘வாபஸ்’ பெற்று விட்ட நிலையில், சென்னையில்
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினரின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
தொடர்கிறது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர் ஒருவர்
தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டம் நடத்திய பார்வையற்றோர் கூட்டமைப்பினர்
நேற்றுமுன்தினம் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
தீக்குளிக்க முயற்சி
ஆனால், அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும்
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு
உடனடியாக பணி நியமனம் வழங்கவேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி 3–வது
நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
இந்தநிலையில் நேற்று காலை
போராட்டக்காரர்களில் நாகராஜன் எனும் மாற்றுத்திறனாளி தனது உடலில்
திடீரென்று பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்த போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக
தூக்கிச் சென்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்த போராட்டத்தின் போது கூட்டமைப்பின் தலைவர் எம்.குமார்
திடீரென்று மயங்கி சரிந்தார். உடனடியாக ஆம்புலன்சில் இருந்த
மருத்துவக்குழுவினர் குமாரை பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு ரத்த
அழுத்தம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை
ஆம்புலன்சு மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







