பயிற்சி நிறைவு
ராணுவத்தின் பல்வேறு படை பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 185 பேருக்கு கடந்த ஒரு வருட காலமாக சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த கடும் பயிற்சியை நிறைவு செய்த அவர்கள் இன்று (சனிக் கிழமை) முதல் ராணுவத்தில் பணியில் சேர உள்ளனர்.
‘தீ’ வளையத்துக்குள் குதிரை
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.பி.சா கலந்துகொண்டார். ராணுவ பயிற்சி பெறும் வீரர்களின் பெற்றோர், ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ராணுவ வீரர்களின் சாகத்தை பார்வையிட வந்திருந்தனர்.
அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், தீப்பந்தம் கொளுத்தப்பட்ட வளை யம், மேஜை ஆகியவற்றை குதிரையில் தாண்டுதல், குதிரையில் சவாரி செய்தவாறு தரையில் போடப்பட்டிருந்த துணியை கையால் எடுத்தல், தரையில் போடப்பட்டிருந்த ‘தெர்மாகூல்’ பேப்பரை ஈட்டியால் குத்தி எடுத்தல் ஆகியவை கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
சிலம்பம்
தீ கொளுத்தி அடுக்கி வைக் கப்பட்டிருந்த ஓடுகளை கையால் உடைத்தல், 6 பேர் தரையில் படுத்து கிடக்க, தூரத்தில் இருந்து ஓடி வந்து தாண்டியவாறு ஓடுகளை உடைத்தல், வயிற்றில் அடித்து கம்பு, ஓடுகளை உடைத் தல் உள்ளிட்ட மெய் சிலிர்க்கும் காட்சிகள் பார்வையாளர் களை வியப்பில் ஆழ்த்தியது.
கேரள பாரம்பரிய சண்டைகள், சிலம்பம் சுற்றுதல், இசைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்தல், ‘பிரமிடு’ போன்று ராணுவ வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நிற்பது என சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
185 பேரின் பயிற்சி நிறைவு
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கர்னல் மைக்கேல் டிசோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
49 வார கடுமையான பயிற்சிக்கு பின்னர் 39 பெண்கள், 140 ஆண்கள் மற்றும் நட்புறவு நாடுகளை சேர்ந்த 6 வெளிநாட்டினர் என மொத்தம் 185 பேர் பயிற்சியை இன்று (சனிக்கிழமை) நிறைவு செய்ய உள்ளனர். இவர்களுக்கு 2 கட்டங்களாக உடல்கூறு, தற்காப்பு, ஆயுதங்களை கையாளும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான பயிற்சியை காண்பிப்பதற்காக இந்த கண்கவர் சாகநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்று சென்னையில் நடைபெறும் ராணுவ வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் ஷிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தின் தலைமை அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் மாதோக் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.








