மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரிகளில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ்.
இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.மத்திய தொழிலாளர் நலத் துறையின் கீழ் தமிழகம் உள்பட
நாடு முழுவதும் 11 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு
முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்.
இடங்களில் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை
கே.கே.நகரில் 2013-14-ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரியில் ஆண்டுக்கு 100 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வீதம் கடந்த இரண்டு
கல்வி ஆண்டுகளாக மொத்தம் 200 பேர் படித்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை உண்டு: நிதிச் சுமை காரணமாக தமிழகம்
உள்பட நாடு முழுவதும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை
தொடர்ந்து நடத்தப் போவதில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஎஸ்ஐ நிறுவனம்
முடிவு செய்தது. மாணவர்களின் போராட்டத்தையடுத்து, மாணவர்களின் நலன் கருதி
தமிழகம் உள்பட அனைத்து இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழ் கல்வி
ஆண்டிலும் (2015-16) மாணவர் சேர்க்கையைத் தொடர இஎஸ்ஐ நிறுவனம் முடிவு
செய்து குறிப்பாணையை அனுப்பியுள்ளது.
எவ்வளவு எம்.பி.பி.எஸ். இடங்கள்? தமிழகத்தைப்
பொருத்தவரை சென்னை கே.கே. நகரில் மட்டுமே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி
செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ
பல்கலைக்கழகத்தின் கீழ் இந்தக் கல்லூரி செயல்படுவதால், கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆண்டுதோறும் நடத்தும் கலந்தாய்வுப்
பட்டியலில் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.
இடங்களின் பட்டியலில் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி இடம்பெறுவது
வழக்கமாக உள்ளது.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்
மொத்தம் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில், 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் (65
சதவீதம்) கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்ப
சமர்ப்பிக்கப்படுகின்றன. 15 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள 20 எம்.பி.பி.எஸ். இடங்கள்
(20 சதவீதம்) தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு என ஒதுக்கப்படுவதாகக்
கூறப்படுகிறது.
சர்ச்சை என்ன? சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரி அரசின் கலந்தாய்வுக்கு அளிக்கும் 65 அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் மாணவர்களின் பெயர் இணையதளத்தில்
பட்டியலிடப்படுகிறது; இதே போன்று அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15
எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் மாணவர்களின் பெயரை மத்திய சுகாதாரத் துறை
பட்டியலிடுகிறது.
ஆனால், தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படுவதாகக்
கூறும் 20 எம்.பி.பி.எஸ். இடங்களில் (20 சதவீதம்) சேரும் மாணவர்களின்
பெயர், அவர்களது குடும்ப விவரம் ஆகியவை குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை
என்பது மருத்துவக் கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத
எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் மாணவர்கள் குறித்த விவரம் தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கோ அல்லது தமிழ்நாடு
மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கோ சமர்ப்பிக்கப்படுவதில்லை.
இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளிலும்
இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை.
மாறாக, இஎஸ்ஐ நிர்வாகமே தரவரிசைப் பட்டியல் தயாரித்து,
20 சதவீத இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த
தரவரிசைப் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்பதே மருத்துவக்
கல்வியாளர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை கல்லூரியின் நிலைமை என்ன? கோவையில் மருத்துவக்
கல்லூரியைத் தொடங்குவதற்கான கட்டடங்களை இஎஸ்ஐ நிறுவனம் கட்டியுள்ளது.
எனினும் நிதிச் சுமை காரணமாக கோவையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியைத்
தொடங்காமல், அதை பல்நோக்கு சிறப்பு இஎஸ்ஐ மருத்துவமனையாக மாற்றும் முடிவை
இஎஸ்ஐ நிர்வாகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
"முறைகேடு புகார்: விசாரணை தேவை'
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரிகள் கட்ட ரூ.10,500 கோடி செலவிடப்பட்டுள்ளதில் நடைபெற்றுள்ள
முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக
சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:-
""இந்தியாவில் மருத்துவர்களின் தேவையை நிறைவேற்ற
வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நல்வாழ்வுத் துறையின்
கடமையாகும். இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நலத் துறையின் கட்டுப்பாட்டில்
உள்ள இஎஸ்ஐ நிர்வாகம் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியது சரி அல்ல.
மேலும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 1.9 கோடி
இஎஸ்ஐசி பயனாளிகளின் (தொழிலாளர்கள்) பணம் மூலம் மருத்துவக் கல்லூரியை
இஎஸ்ஐசி நிர்வாகம் தொடங்கியது. அதாவது ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.750
கோடி வீதம் 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை மொத்தம் ரூ.10,500 கோடியில் அது
கட்டியுள்ளது. இவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு
வருகின்றன. சென்னை கே.கே. நகரில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்
தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ். இட
ஒதுக்கீட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இல்லாதது ஏன் என இஎஸ்ஐ
நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில்
தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களை
நிரப்புவதில் தொடங்கி, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த ரூ.10,500
கோடியைச் செலவு செய்ததில் பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே
முழுமையான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்'' என்று டாக்டர்
ஜி.ஆர். ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.








