கல்விதான் ஒருவரை கடைசி வரை தாங்கி நிற்கும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என திரைப்பட நடிகர் தியாகு தெரிவித்தார்.திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில், கல்லூரிக்கு 100 சதவீதம் வருகை
தந்த, பல்கலைக் கழகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற, தமிழ், ஆங்கிலத்தில்
நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி நடிகர் தியாகு மேலும் பேசியது:
மாணவர்கள் என்னால் முடியும் என்ற சிந்தனையை வளர்த்துக்
கொண்டு, ஒவ்வொரு செயலிலும் ஈடுபட வேண்டும். பாடங்களைப் படிப்பது மட்டும்
அல்லாமல், பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன்மூலம், சமுதாயத்தில் அனைத்தையும் அறிந்தவராகத் திகழ
முடியும். மாணவர்கள் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையோடும் வாழ்வில்
முன்னேற வேண்டும்.
மாணவப் பருவத்தில் உலகத்தின் ஜன்னல்களைத்
திறந்துவிடுபவர்கள் ஆசிரியர்கள்தான். அவர்கள் இல்லாவிட்டால் நமக்கு
வாழ்க்கையே இல்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிகவும்
அவசியம். அப்படி வாழ்க்கையில் உயர்ந்த பின்பு கடைசி காலம் வரை தங்களது
பெற்றோரை காப்பாற்ற வேண்டும். அது பிள்ளைகளுடைய தலையாயக் கடமை.
கல்விதான் ஒருவரை கடைசி வரை தாங்கி நிற்கும். படிக்கும் காலத்தில் சரியாகப் படிக்க வேண்டும்.
மாணவர்களின் முன்னேற்றம் அவர்களுடைய பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
விழாவுக்கு, கல்லூரித் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை
வகித்தார். செயலர் ஈ.சுப்பிரமணியன், கல்லூரித் தாளாளர் வி.கல்யாணசுந்தரம்,
துணைத் தலைவர் எஸ்.முஸ்தாக் அகமது, பொருளாளர் வீ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன் வரவேற்றார்.
கல்லூரி நிர்வாக அலுவலர் ஆர்.குமார், அறக்கட்டளை
உறுப்பினர்கள் பிரமோத்குமார், சத்தியநாராயணன், பழனிராஜ், வெங்கடேசன்,
குபேரன், இம்தியாஸ், சாந்தியம்மாள், சதாம்ஊசேன், கிருபாலட்சுமி உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர். கல்லூரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.








