திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே உள்ளன என்று மொழியறிஞர்கள் தெரிவித்தனர்.தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மொழி, இலக்கியம்,
கலாசார புலம் துறை, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய மையம் ஆகியவை
சார்பில் "உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்' குறித்த
மூன்று நாள் தேசியக் கருத்தரங்கு அப்பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை
தொடங்கியது.
இக்கருத்தரங்கின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, ராஜஸ்தான் மத்தியப்
பல்கலை., தில்லி பல்கலை., ஜவாஹர்லால் நேரு பல்கலை. பேராசிரியர்கள்,
மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஃபிரெஞ்சு, சம்ஸ்கிருதம், ஹிந்தி, உருது,
மலையாளம், கொங்கணி, ஒடிய, கன்னடம் ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள
திருக்குறள் தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, திருக்குறளுக்கு எழுதப் பெற்ற உரைகளையும்,
ஜி.யூ.போப்பின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு
வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் மூல நூலுடன்
நெருக்கமாக அமைந்துள்ளதே தவிர, அதில் கவிதை நயம் போன்றவை வெளிப்படவில்லை
என்றும் தெரிவித்தனர். எனவே, திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும்
உரை விளக்கங்களாக மட்டுமே கருத முடியும் என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.
இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் எச்.பாலசுப்பிரமணியம், எஸ்.சோபா,
என்.லட்சுமி ஐயர், நா.சந்திரசேகரன், ப.விமலா, கே.புகழேந்தி, தமிழ் முனைவர்
பட்ட ஆய்வாளர்கள் எம்.ஜி.ஆர். சச்சிதானந்தம், இரா. தமிழ்ச்செல்வன், கு.
திலகவதி, அழகு சுப்பையா, மணிமாலா, மு. முரளி, அ. ஜெயபால் ஆகியோர்
பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கின் தொடக்க நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்
ஜப்பான், ருஷ்யன், அரபு, ஃபிரெஞ்சு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
எவ்வாறு வெளிவந்துள்ளன என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
இதில் ஜேஎன்யு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தின் தலைவர் பேராசிரியர்
எஸ்.எம்.அன்வர் ஆலம், மொழி இந்தியப் புலத் தலைவர் பேராசிரியர் வைஷ்ண நரங்,
மொழி அறிஞர் த.வி.வேங்கடேஸ்வரன், ஜேஎன்யு ஜப்பானிய மொழிகள் துறை
பேராசிரியர் ஜார்ஜ், ருஷ்ய மொழிகள் மைய பேராசிரியை ஜனனி உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.








