வருமான வரிவிலக்கு
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.100-ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
செலுத்தும் தொகைக்கு 80-சி யின் கீழ் வருமான வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. 2014-2015 நிதியாண்டில், இக்கணக்குகளின் வருடாந்திர வட்டி விகிதம் 9.1 சதவீதம் கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது. விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பெண் குழந்தைகளின் 18-ஆவது வயதிலிருந்து 50 சதவீதம் வைப்புத் தொகையினை உயர்கல்விக்காகவும், திருமணத்திற்காகவும், கணக்கிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின்னர் கணக்கை முடித்துக் கொள்ளலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும், கணக்கை எவ்வித வட்டி இழப்புமின்றி முடித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள தபால் அலுவலகங்களில் கைகுழந்தைகளுடன் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
வங்கிகளிலும் இந்த திட்டங்கள் தொடங்கப்படுவதால், அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு தகவலை அனுப்பி உள்ளது. அதில், ‘‘இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை தினசரி ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்,’’ என்றும் அறிவித்துள்ளது.








