தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான
பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று திருமாவளவன்
வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காலி பணியிடங்கள்தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள்
உரிய வகையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. சுமார் இருபத்து மூன்றாயிரம்
பணியிடங்கள் அப்படி நிரப்பப்படவில்லை என கடந்த 2014-ம் ஆண்டு பொதுநல வழக்கு
தொடரப்பட்டது. அந்தப் பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை முழுமையாக
நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு வெளியிடவேண்டும்
என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஆட்சியில் எந்தக்கட்சி இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினருக்கான பணியிடங்கள் சரியாக நிரப்பப்படுவதில்லை.
அவற்றைக்காலியாக வைத்திருந்து சில காலம் கழித்து பிற வகுப்பினரைக்கொண்டு
நிரப்பிக்கொள்வது என்ற மோசமான நடைமுறை தமிழ்நாட்டின் பல்வேறு
அரசுத்துறைகளிலும் நீண்டகாலமாக இருந்துவருகிறது. தகுதி வாய்ந்தவர்கள்
இந்தச்சமூகங்களில் ஏராளமானோர் இருந்தபோதிலும் அவர்களுக்குரிய பணி வாய்ப்பு
இதனால் மறுக்கப்பட்டு வருகிறது.
கேலி கூத்து
பின்னடைவுக்காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அவ்வப்போது சிறப்பு நடவடிக்கை
எடுக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் சொல்வது வெறும் கண்துடைப்பே ஆகும். மத்திய
அரசு உருவாக்கிய அனைத்து ஆணையங்களுக்கும் மாநில ஆணையங்களை
உருவாக்கியிருக்கும் தமிழக அரசு இதுவரை தாழ்த்தப்பட்டோருக்கும்,
பழங்குடியினருக்கும் ஆணையங்களை உருவாக்கவில்லை. அது தொடர்பாக
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
முதலானவை இருக்கும்போது தாழ்த்தப்பட்டோருக் கும் பழங்குடியினருக்கும்
மட்டும் ஆணையம் அமைக்காமல் இருப்பது சமூகநீதியைக் கேலிக்
கூத்தாக்கிக்கொண்டிருக்கிறது.
நிரப்ப வேண்டும்
2015 ஜனவரி மாதத்துக்குள் அனைத்து பின்னடைவுக்காலிப்பணியிடங்களையும்
நிரப்பவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்தும் கூட தமிழக
அரசு மெத்தனம் காட்டுவது வேதனை அளிக்கிறது. உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி
எந்தெந்தத்துறைகளில் எத்தனை பின்னடைவுக்காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன
என்ற விவரத்தைத் தமிழக அரசு உடனே வெளியிடவேண்டும் என்றும், நிரப்பப்படாமல்
இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.