ஈஷா அறக்கட்டளை நடத்தும் சம்ஸ்கிருத பள்ளியில் மாணவர்களை சேர்க்கத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞர் எம்.வெற்றிச் செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா
அறக்கட்டளை சட்டவிரோதமாகக் கட்டடம் கட்டியுள்ளது. அந்தக் கட்டடத்தில் ஈஷா
சம்ஸ்கிருத (வேதபாடசாலை) பள்ளிக்கூடம் நடத்தப்படுகிறது. இதில், 6 வயது
முதல் 8 வயது வரையிலான சிறுவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அந்த மாணவர்கள் 18
வயது வரை இந்தப் பள்ளியில் கல்வி கற்கின்றனர். ஆனால், அந்தப் பாடங்களுக்கு
மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஒப்புதல் பெறவில்லை. எனவே, பாட சாலையில்
மாணவர்களை சேர்க்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு
வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாடசாலை குறித்து தவறாகப் புரிந்து கொண்டு மனுதாரர் மனு
தாக்கல் செய்துள்ளார். கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என
மனுதாரர் கருதுகிறார். ஆனால், நமது நாட்டில் பலவிதக் கல்வி முறைகள்
நடைமுறையில் உள்ளன. குறிப்பிட்டக் கல்வி முறையைதான் பள்ளியில் பின்பற்ற
வேண்டும் என யாரும் வலியுறுத்த முடியாது.
மனுவை உள்நோக்கத்துடன் மனுதாரர் தாக்கல் செய்துள்ளதால் இதை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.