பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் பெற்றோர்களிடம் சாதிச்
சான்றிதழை கேட்டு வற்புறுத்துகின்றன பள்ளி நிர்வாகங்கள். சாதி, மத
அடையாளத்தை சுமக்க விரும்பாத பெற்றோர், சாதியை குறிப்பிட தேவையில்லை என்று
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை குறித்து பெரும்பாலான பள்ளி
நிர்வாகிகளுக்கு தகவலே தெரியவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள்
பெற்றோர்கள்.
சாதி அடையாளத்தை சுமப்பவர்களில் இங்கே இரு பிரிவினர் உண்டு. ஒன்று,
பெருமைக்காக சுமப்பவர்கள். மற்றொன்று, இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளுக்காக
சுமப்பவர்கள். இரண்டாம் வகையினரின் எதிர்பார்ப்புகள் நியாயமானவை; காலம்
காலமாக ஒடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள
பயன்படும் கேடயம் அது. ஆனால், சாதி அடையாளமே வேண்டாம் என்று ஒரு பிரிவினர்
இருக்கிறார்கள்.
தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவரும் நிலையில் இவர்கள் படும்
அவஸ்தைகள் மிக அதிகம். மதம் மற்றும் சாதி என்று கேட்கப்படும் கட்டத்தில்
வெறும் கோடிட்டோ அல்லது ‘எதுவும் இல்லை’ என்று எழுதினாலோ பள்ளி நிர்வாகிகள்
அதிர்ச்சி அடைந்து விண்ணப்பத்தை நிராகரித்துவிடுகிறார்கள்.
சாதிய கட்டமைப்புகள் ஒரு பக்கம் வலுவடைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் சமூக
மாற்றங்களை விரும்புவோர் இடையே அது வலுவிழந்து வருகிறது. அவர்களை
வரவேற்பது, குறைந்தபட்சம் புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம். சாதியை
ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கை என்றும் இதனை கருதலாம். தவிர, குழந்தையின்
பள்ளிச் சேர்க்கையில் இதைத் தொடங்கும்போது குழந்தையின் மனதிலிருந்தே
சாதியம் என்கிற வேர் அகற்றப்படுகிறது. இதன் மூலம் அடுத்த தலைமுறையே சாதிகள்
இல்லாத சமூகமாக உருவாகலாம்.
தமிழக அரசு கடந்த 1973-ம் ஆண்டிலேயே ‘சாதி இல்லை; சமயம் இல்லை என்று ஒருவர்
குறிப்பிட்டுக்கொள்ளலாம்’ என அரசாணை வெளியிட்டுள்ளது. இடையே அது
வழக்கொழிந்து போனதைத் தொடர்ந்து கடந்த 31.7.2000-ம் அன்று மீண்டும் ஓர்
அரசாணை வெளியிட்டு, ‘பள்ளியில் சேரும்போதும், மற்ற சமயங்களிலும் பெற்றோர்
விருப்பப்படாவிட்டாலும், தெரிவிக்க இயலாவிட்டாலும் சாதி சமயம் குறிப்பு
தேவையில்லை’ என்று வலியுறுத்தியுள்ளது.
ஆனால், இப்படி ஓர் அரசாணை இருப்பதே பெரும்பாலான பள்ளி நிர்வாகிகளுக்குத்
தெரியவில்லை. சாதி அடையாளத்தை வெறுக்கும் பெற்றோர் ஒருவர் ‘தி இந்து’விடம்
கூறும்போது, “நாங்கள் அரசிடம் சலுகைகளை எதிர்பார்த்து சாதி அடையாளத்தை
துறக்கவில்லை. சாதி இல்லாத மேம்பட்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே
எங்கள் நோக்கம். எனவே, எங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் எந்த
சங்கடமும் இல்லாமல் படித்து வர அரசு ஒத்துழைக்க வேண்டும். BC, OC, FC
என்பதுபோல சாதி, சமய அடையாளமற்றவர்களுக்கு NC, NR (No caste, No religion)
என்று தனி குறியீடு வழங்க வேண்டும். தற்போது சில பள்ளிகளில் எங்களை சாதி
அடையாளமற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும் 10-ம் வகுப்பில் எங்கள்
குழந்தைகளை OC என்னும் பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள். அப்போது எங்கள்
குழந்தைகளும் OC பிரிவில் வரும் சாதிகளில் ஏதோ ஒரு சாதியை சேர்ந்த
குழந்தைகளாகிவிடுகிறார்கள்.
கடுமையான போட்டிகள் நிறைந்த எதிர்காலத்தில் எங்கள் குழந்தைகள்
எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் அறிந்தே நாங்கள் இந்த முடிவை
எடுத்துள்ளோம். எனவே, அரசாணை வெளியிட்டது மட்டுமின்றி இதுகுறித்து
பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்” என்கின்றனர்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர
பாபு, “தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தாலும் அதனால் பலன்
ஒன்றும் இல்லை. பள்ளிகளில் மட்டும் அல்ல, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும்
‘சாதி, சமயமற்றவர்’ என்று குறிப்பிட்டால் அவர்கள் பொதுப் பட்டியலில்தான்
சேர்க்கப்படுவார்கள். ஏனெனில் சாதி, சமயமற்றவர்களுக்காக தனிப் பட்டியல்
(Column) இதுவரை உருவாக்கப்படவில்லை. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில்
மதம், சாதி அடையாளம் இல்லாமல் இருப்பதற்கு தனி நபருக்கு உரிமை இருக்கிறது.
எனவே, நாடாளுமன்றத்தில் தனி சட்டம் இயற்றுவதன் மூலமே இதற்கான உரிமையை அடைய
இயலும். அதேநேரம் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஓர் அம்சமும் உண்டு.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் சில கடந்த கால்
நூற்றாண்டாகத்தான் இட ஒதுக்கீடு மூலமே உயர் கல்வியை பெற்று வருகிறார்கள்.
எனவே, இதனையே காரணம் காட்டி ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை
மறுக்கக் கூடாது” என்கிறார்.