சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 2,664 மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்தி: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகள், சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும்
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனை செய்யப்படுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கண் பரிசோதனை
சிறப்பு முகாம்களில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 852 மாணவ-மாணவியர்களுக்கு கண்
பரிசோதனை செய்யப்பட்டதில், 31 ஆயிரத்து 500 பேருக்கு பார்வைத் திறன்
குறைபாடு கண்டறியப்பட்டது. இவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள்
வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சென்னை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்
சங்கத்தின் மூலம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் என 371 பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
தனியார், அரசு கண் மருத்துவனைகள், தொண்டு நிறுவனங்களின்
கண் மருத்துவமனைகள் உதவியுடன் இந்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில்
57 ஆயிரத்து 541 மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதில் 4 ஆயிரத்து 539
பேருக்கு கண் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 2 ஆயிரத்து 664
பேருக்கு ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் செலவில் இலவச கண் கண்ணாடிகள்
வழங்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 875 மாணவர்களுக்கு மேல் சிகிச்சை
அளிக்கப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








