தமிழ் மொழியின் மூலம்தான் இறைவனைப் புரிந்து கொள்ள முடியும் என்று பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
தருமபுர ஆதீன மணி விழா நினைவு மண்டபம் திறப்பு விழா
சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பன்னிரு திருமுறை உரைவளக்
கருத்தரங்கம் புதிய மணி விழா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆதீனம் சார்பில் "மட் அண்டு
டெம்பிள்ஸ்' என்ற ஆங்கில நூலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார்
கருமுத்து தி. கண்ணன் வெளியிட, அதை பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி
பெற்றுக் கொண்டார்.
பின்னர் எஸ்.குருமூர்த்தி பேசியது: நமது பாரம்பரியத்தை
அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். பாரம்பரியத்தை வளர்க்கும்
அமைப்புகளாக குடும்பம், மடங்கள் திகழ்ந்தன.
ஆனால், தற்போது கல்வி முறை, பத்திரிகைகள்,
தொலைக்காட்சிகள் ஆகியவை அந்த அமைப்புகளைப் பாதித்துள்ளன. பெற்றோர்,
ஆசிரியர்கள், குருக்கள் மூலம் தெய்வத்தைப் பார்த்தோம். தற்போது
பெற்றோருக்கே மரியாதை கொடுப்பதில்லை. இதற்கு தற்போதைய கல்வி முறையே காரணம்.
பாரம்பரியத்துக்கு எதிரான கல்வி முறையை வளர்த்துள்ளோம்.
தமிழ்நாட்டில் தமிழ் படிப்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால், தமிழ்
படிப்பது கட்டாயம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. தமிழ் மீது
மரியாதை இல்லாமல் போய்விட்டது. தமிழ் மொழியின் மூலமே இறைவனைப் புரிந்துக்
கொள்ள முடியும். தமிழ் இல்லையென்றால் இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது.
நம்ப மட்டுமே முடியும் என்றார் குருமூர்த்தி.
இந்த நிகழ்ச்சியில் "திருக்குறள் உரைவளம்' நூலை தமிழக
அரசின் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறைச் செயலாளர் எம். ராசாராம்
வெளியிட்டார். அதை வேளாண்துறை இணைச் செயலாளர் ராஜேந்திரன் பெற்றுக்
கொண்டார்.
பின்னர் ராஜேந்திரன் பேசியது:
வாழ்வுக்குத் தேவையான அத்தனை நெறிகளையும் 2 அடிகளில்
சொல்கிறது திருக்குறள். அதில் மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து
விஷயங்களும் உள்ளன.
தமிழ், சைவத்தை வளர்த்து, அவற்றை அனைவருக்கும் தருமபுர ஆதீனம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன் பேசியது: சைவ
சமயம் என்பது வாழ்க்கை நெறி. வட இந்தியாவில் கடும் தவம் செய்தால் மட்டுமே
இறைவனை அடைய முடியும் என்றனர். ஆனால், சாதாரண வாழ்க்கை நெறிகளைக்
கடைப்பிடிப்பதன் மூலம் இறைவனை அடைய முடியும் என்று சொன்னது சைவம்.
நாயன்மார்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துதான் இறைவனை அடைந்தனர். சைவ நெறி என்பது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று சொல்வதுதான்.
நமது வாழ்க்கை கோயில்களைச் சுற்றியே இருந்தது. படை
வந்தால் மக்கள் அனைவரும் கோயில்களிலேயே தஞ்சம் புகுந்தனர். அங்கு தானியம்,
தண்ணீர், இடம், கல்வி, இசை போன்ற அனைத்தும் இருந்தன. வாழ்க்கைக்குத்
தேவையான அனைத்தும் கோயில்களில் இருந்தன.
சுதந்திரம் பெற்று மக்களாட்சி வந்தவுடன், பண்பாடு,
மொழியைத் தியாகம் செய்துவிட்டோம். நமது மொழி எதற்கும் பயன்படாத நிலை
ஏற்பட்டுள்ளது. ரயில் பயணச்சீட்டுகள் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலுமே
உள்ளன. இலக்கியம், சமய நூல்களை வீட்டில் படிக்க வேண்டும். பள்ளிகளில் அவை
கற்பிக்கப்பட வேண்டும்.
வழிபாட்டு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் திகழ்ந்தால் மட்டுமே தமிழ் வளரும் என்றார் ச. முத்துக்குமரன்.
முன்னதாக, ஆதீனத்தின் தம்பிரான் சுவாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சாரதா நம்பி ஆரூரன், புலவர் எம்.கே.
பிரபாகரமூர்த்தி, மோ. ஞானப்பூங்கோதை, யாழ் ச. சந்திரா உள்ளிட்டோர் திருமுறை
உரைவளக் கருத்துரைகளை வழங்கினர். தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தருமபுர ஆதீன 26-ஆவது குரு ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன.








