சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமியின்
நிழல் சந்திரன் மீது படுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. வருகிற 4-ந்தேதி
சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-
ஏப்ரல் 4-ந்தேதி பகல் 3-45மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கி இரவு 8-30மணிக்கு
முடிவடைகிறது. இந்த சந்திரகிரணம் தென் அமெரிக்கா, வடஅமெரிக்கா,
ஆஸ்திரேலியா, ஆசியாவின் கிழக்கு பகுதி ஆகியவற்றில் நன்றாக தெரியும்.
இந்தியாவில் ஓரளவுக்குதான் சந்திரகிரகணம் தெரியும். காரணம் இரவில்தான்
சந்திரன் உதிக்கும். தமிழ்நாட்டில் இரவு 7மணிக்குதான் சந்திரன் உதயமாகும்.
அது முதல் இரவு 7-15 மணிவரை சந்திரகிரகணம் தெரியும். அதுவும் நன்றாக
கூர்ந்து பார்த்தால் சந்திரனில் ஒரு பகுதி சற்று வெளிச்சம் குறைவாக
இருக்கும்.
அந்த காட்சியை பார்வையிட சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் 4 தொலை
நோக்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், பெரியவர்கள் யார்
வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். வெறும் கண்ணால் சந்திரனை பார்த்தால்
எந்த தீங்கும் ஏற்படாது.
இவ்வாறு அய்யம்பெருமாள் தெரிவித்தார்.