பெட்ரோலிய விற்பனையாளர்களின்
கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை (ஏப்ரல் 11)
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை
நிலையங்கள் இயங்கும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்
அறிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.முரளி கூறியது:
விளிம்புத் தொகையை ("டீலர் மார்ஜின்') உயர்த்த வேண்டும்
உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பெட்ரோலிய
விற்பனையாளர்கள் சனிக்கிழமை கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட
உள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகத்தில் உள்ள
4,470 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள 150
விற்பனை நிலையங்களில் ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும். அதன்பிறகு விற்பனை நிலையங்கள்
இயங்காது.
ஏப்ரல் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும் என்றார்.








