நாட்டில் மகளிர் மேம்பாட்டுக்கு
கல்வி அவசியமாகும். ஆகவே, பெண் குழந்தைகளை கல்வி கற்க வைப்பதே அவர்களுக்கு
நாம் அளிக்கும் சிறந்த பரிசாகும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
சஞ்சய் கிஷன் கெளல் தெரிவித்தார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மகளிர்
வழக்குரைஞர்கள் சங்க 2ஆவது மாநில மாநாட்டில் அவர் பேசியது: சமூகம் என்பது
ஆண், பெண் சேர்ந்ததே. ஆண்களால் மட்டும் சமூகம் முழுமையடைவதில்லை.
பெண்களுக்கான சமஉரிமை உலக அளவில் பேசப்பட்டாலும், நம்நாட்டில் அதிகம்
விவாதிக்கப்படுகிறது.
உடல் வலிமை மட்டுமல்லாது, சிந்தனை அடிப்படையிலும்
ஆண்களை விட பெண்களே மேம்பட்டவர்களாக உள்ளனர். வீட்டு வேலை, அலுவலக வேலை என
அனைத்து நிலைகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாகவே சிந்தித்துச்
செயல்படுகின்றனர்.
ஆண், பெண் வேறுபாடு நமது ஆழ்மனதில் பதிந்துவருகிறது.
பெற்றோர் கூட குழந்தை வளர்ப்பிலும் ஆண், பெண் வேறுபாட்டை காட்டுவதால்
இந்நிலை தொடர்கிறது. பெண்கள் பொருளாதார ரீதியில் விடுதலை பெறவேண்டியது
அவசியம். அதற்கு கல்வி அறிவு மிகமிக அவசியம். சட்டத்துறையில் பெண்கள்
முன்னேறினால் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் அது பயன்படும்.
புதுதில்லியில் மாவட்ட நீதிமன்றங்களில் 73 சதவீதமும்,
பஞ்சாப், ஹரியானாவில் 40 சதவீதமும் பெண்கள் உள்ளனர். சென்னை போன்ற
இடங்களிலும் நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு கூடியுள்ளது.
பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பதைவிட, ஆண்கள் போலவே சம உரிமை கோரி அந்த நிலையை ஏற்படுத்துவதே சிறந்தது என்றார்.
ஓவியக் கண்காட்சி: நிகழ்ச்சியில், வைக்கப்பட்டிருந்த
சென்னை ரவிவர்மா ஆர்ட் கேலரி என்.சுவர்ணலதா வரைந்த பெண்கள் மீதான
வன்முறைக்கு மகாத்மா கவலைப்படுவது உள்ளிட்ட நவீன ஓவியங்களை அவர்
பார்வையிட்டார்.
மாநாட்டில் சைபர் குற்றங்கள், பெண்கள் மீதான வன்முறை ஆகிய தலைப்புகளில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது.








