கல்வி கற்பது சம்பாதிப்பதற்கான
வழியாக மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என,
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள மொத்த
நிலப்பரப்பில் 25 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்திய தட்பவெப்ப நிலை, ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு சாதகமாக உள்ளது.
ஆனாலும், நம்மால் ஏன் சாதிக்க முடியவில்லை என்பதற்கான ஆராய்ச்சியில்
மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
நதிகளே இல்லாத இஸ்ரேல், சவூதி நாடுகளில் கடல் நீரை
நன்னீராக மாற்றி நவீன தொழில்நுட்பங்களுடன் விவசாய உற்பத்தியில்
ஈடுபடுகின்றன. காவிரி, முல்லை பெரியாறுகளை மட்டுமே நம்பியிருக்காமல், கடல்
நீரை பயன்படுத்தி தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான
ஆராய்ச்சிகள் தற்போதைய தேவையாக உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்,
தண்ணீருக்காக பிற மாநிலங்களுடன் சண்டையிடும் நிலை ஏற்படாது.
ஆரம்ப கல்விக்கு செல்லும் மாணவர்கள், பொருளாதார
பிரச்னையால் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு தடைபடுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். புதிய
கண்டுபிடிப்புகள் மூலம், இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் பெற இன்றைய
மாணவர்கள் துணை நிற்க வேண்டும். கல்வி கற்பது சம்பாதிப்பதற்கான வழியாக
மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணம்
இளைஞர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்றார் அவர்.
கருப்புக் கொடி: சுப்பிரமணியன் சுவாமியின் வருகைக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நகரச் செயலர் யாசர் அராபத் தலைமையில்
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பேகம்பூரில் இருந்து கருப்புக்
கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்தி நிறுத்திய போலீஸார்,
ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து,
ஊர்வலமாக செல்ல முயன்ற தமுமுகவினர் 37 பேரை போலீஸார் கைது செய்தனர்.








