தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலப்
பள்ளிகளின் நிலையை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்
தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக
புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலவசக் கல்வி, மதிய உணவு, சீருடை என பல்வேறு திட்டங்கள்
மூலம் தமிழகத்தில் கல்வி புரட்சியை உண்டாக்கியவர் காமராஜர். கல்வியில்
இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம் அப்போது அந்த பெருமையை
இழந்து வருகிறது.தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவசக் கல்வி
வழங்க, பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 2014-15-ஆம்
கல்வியாண்டில் 798 ஆரம்பப் பள்ளிகளில் 62,110 மாணவர்களும், 81 உயர்நிலைப்
பள்ளிகளில் 19,465 மாணவர்களும் பயில்கின்றனர்.
ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களில் மூன்றில் ஒரு
பகுதியினர் மட்டுமே 10-ஆம் வகுப்புக்குச் செல்கின்றனர் என்பது அதிர்ச்சி
அளிக்கிறது. ஆரம்பப் பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தான்
குழந்தைத் தொழிலாளர்களாக மாறுகின்றனர்.ஆதிதிராவிடர் நலப் பள்ளிóகளில்
அடிப்படை கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள், கழிவறை, குடிநீர் போன்ற
அடிப்படை வசதிகள் இல்லாததே இந்த அவல நிலைக்கு காரணம்.மத்திய அரசின்
சிóறப்பு திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 14,757
லட்சத்தில் தமிழக அரசு ரூ. 8,838 லட்சத்தை மட்டுமே செலவழித்துள்ளது. இதனால்
பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 82 சதவீத மாணவர்கள்
தரையில் அமர்ந்து பாடம் படிக்கும் நிலை உள்ளது. 82 சதவீத பள்ளிகளில்
நூலகம், 58 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானம், 36 சதவீத பள்ளிகளில்
கழிவறை வசதிகள் இல்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்தி மாணவர்கள் இடைநிற்றலை தடுத்து நிறுத்த வேண்டும் என இளங்கோவன்
வலியுறுத்தியுள்ளார்.








