திருவள்ளுவர் இயக்கத்தில் நாடு
முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் ஒரு கோடிப் பேரை சேர்க்கத்
திட்டமிட்டுள்ளதாக தருண் விஜய் எம்.பி. கூறினார்.
மேலும், இதன் முதல்கட்டமாக 10 லட்சம் உறுப்பினர்கள்
இணைக்கப்பட்டு, அவர்களுக்கு சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் வகையில்,
சிறிய அளவிலான திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
வித்யா பாரதி அமைப்பின் சார்பில், கல்வியில் கலாசார
மறுமலர்ச்சி தேசிய கருத்தரங்கம் விஐடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் "பாரதிய குடும்பம் நெறிமுறைகள் 1,000' என்ற நூலை விஐடி வேந்தர்
ஜி.விசுவநாதன் வெளியிட, அதன் முதல் பிரதியை மாநிலங்களவை உறுப்பினர் தருண்
விஜய் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தருண் விஜய் பேசியதாவது:
உலகம் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும், தனி மனிதன்
கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் சொல்லும் நூலாக மட்டுமின்றி, இன்றைக்கு
நாம் சந்திக்கும் எந்தப் பிரச்னைக்கும் விடை காணும் நூலாகவும் திருக்குறள்
விளங்குகிறது. இதனால்தான் நான் இளைஞர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும்
இந்த நூலையும், அதன் கருத்துகளையும் எடுத்துச் செல்வதற்கான இயக்கத்தைத்
தொடங்கியுள்ளேன்.
அனைத்து சமூகப் பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக்
கூடியதாக உள்ள திருக்குறளை நாம் ஒவ்வொருவரும் சட்டைப் பையில் வைத்திருப்பது
அவசியம். இந்த தேசத்தை ஒன்றுபடுத்தும் மிகப் பெரிய சக்தியாக திருக்குறள்
விளங்குகிறது. கலாசார மறுமலர்ச்சியை நாம் மீண்டும் நாடு முழுவதும்
ஏற்படுத்த வேண்டியுள்ளது.
தாய்மொழி மீதான பற்று அவசியமான ஒன்று. முதலில் நாம்
தாய் மொழியை மதிக்க வேண்டும். நம்முடைய கலாசாரத்தை நாம் நினைவுகூர்ந்து
பாதுகாக்கத் தவறினால் நாம் நம்முடைய அடையாளத்தை இழந்து விடுவோம்.
திருவள்ளுவர், ஆண்டாள், கண்ணகி போன்ற நம்முடைய மூதாதையர் பெருமைகளை
எடுத்துக் கூறி நம்முடைய அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்றார் தருண் விஜய்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவள்ளுவருக்காக மாணவர், இளைஞர்கள் என்ற
விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின் மூலம் வடமாநில மாணவர்களை திருவள்ளுவரின்
பெயரை சரியாக உச்சரிக்க வைத்துள்ளோம். இயக்கத்தில் இதுவரை தமிழகத்தில்
மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். நாடளவில் ஒரு கோடி பேரை
இதில் இணைக்க திட்டமிட்டுள்ளோம். 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும்
அவர்கள் அனைவருக்கும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் வகையிலான சிறிய
திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
வட மாநிலங்களில் 500 கல்லூரிகள், பள்ளிகளில்
திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஆங்கிலம், ஹிந்தி
மொழிகளில் அளிக்கவுள்ளோம் என்றார் அவர்.
பொற்கிழி: திருக்குறளின் 1,330 குறள்களையும் ஒப்பவித்த
சென்னை வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி ஓவியா, கந்திலி பள்ளி மாணவி சிநேகா,
மாணவர் சந்துரு ஆகியோருக்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பொற்கிழி
வழங்கினார்.
நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி
சீனிவாசன், திருவள்ளுவருக்காக மாணவர், இளைஞர்கள் இயக்க மாநில அமைப்பாளர்
சி.ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








