திருச்சியில் திருக்குறள்
திருமூலநாதர் அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 13-ஆம் ஆண்டு
திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 100 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம்
பரிசாக வழங்கப்பட்டது.பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறுவர் இலக்கியத்துக்கான
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மா. கமலவேலன் பங்கேற்று
விருதுகளையும், பண முடிப்பையும் வழங்கிப் பேசினார்.
அப்போது, "எந்த மதமும், இனமும் சாராத பொதுமறையாக விளங்கும் திருக்குறள் மனித குலத்தின் "பண்பாட்டுப் பெட்டகம்' எனக் குறிப்பிட்டார்.
முதல் 500 குறள்களை ஒப்பித்தவர்களுக்குப் பாராட்டுப்
பரிசும், 1 முதல் 1,330 குறள்களையும் ஒப்பித்தவர்களுக்கு விருதும்
வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து 103 பேர் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், இரண்டு வயது குழந்தை சி.கா. பொன்னெழிலி தனது மழலை
மொழியில் சுமார் 50 திருக்குறள்களை மேடையில் ஒப்பித்தார். இதில்,
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் பா. மதிவாணன், செட்டிநாடு
கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பழ. முத்தப்பன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.








