கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பை 2
வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தினார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:ஜூன்
1-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக 110
டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவ மழையும் ஜூன் முதல்
வாரத்தின் பிற்பகுதியில்தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஜூன் இரண்டாவது வாரத்தில்தான் கோடை வெயிலின் தாக்கம் ஓரளவாவது
குறையும். இதைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் பள்ளிகளைத்
தொடங்குவது சரியானதாக இருக்கும்.
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.
பள்ளிகள் ஜூன் மூன்றாவது வாரத்தில்தான் திறக்க உள்ளன. சுட்டெரிக்கும்
வெயிலைக் கருத்தில் கொண்டு ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படவிருந்த புதுவை
மாநிலப் பள்ளிகள் 10 நாள்கள் தாமதமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என
அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே, கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
மாணவர்கள் நலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் திறப்பை ஜூன் பிற்பகுதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.







