எஸ்.ஐ. பணிக்கு தனக்கு தனியாகத் தேர்வு நடத்தக் கோரி காவலர் ஒருவர்
தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.அன்னலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:தற்போது நான் திருப்பூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறேன்.இந்த
நிலையில், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் எஸ்.ஐ. பதவிக்காக, அனைத்து
ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் முறையாக சமர்ப்பித்திருந்தேன். ஆனால், எனது
கல்வித் தகுதி சரியாகத் தெரியவில்லை எனக் கூறி தவறுதலாக எனது விண்ணப்பத்தை
நிராகரித்துள்ளனர். மேலும், எஸ்.ஐ. காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 4 அல்லது
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. அடுத்த தேர்வு எப்போது
நடைபெறும் எனத் தெரியாது.
இது குறித்து அதிகாரிகளிடம்
விளக்கமளித்தும், எனது விண்ணப்பத்தைப் பெற அவர்கள் மறுத்துவிட்டனர். அதன்
பின்னர், கடந்த மே 24-ஆம் தேதி எஸ்.ஐ. தேர்வும் நடந்து முடிந்துவிட்டது.எனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனதால், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எனக்கு தனித் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டுóம் என கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.







