தமிழக அரசு மருத்துவமனைகளின் நிர்வாகப் பிரிவுகளில் சுமார் 800 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், மருத்துவமனைகளின் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்பட
வாய்ப்புள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் 19 அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 160
தாலுகா மருத்துவமனைகள், 80 தாலுகா சாராத மருத்துவமனைகள் உள்ளன. நிர்வாக
அலுவலர், இளம் நிர்வாக அலுவலர், துணை நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர்
உள்ளிட்ட 3 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில், 800-க்கும் மேற்பட்ட
பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நிர்வாகம்: மருத்துவமனை பணியாளர்களின் சம்பளம், கடன்,
விடுப்பு, அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட
பல்வேறு பணிகளை நிர்வாகப் பிரிவினர் மேற்கொள்கின்றனர். இதில், பல ஆண்டுகளாக
ஏற்பட்டிருக்கும் காலிப் பணியிடங்கள் காரணமாக நிர்வாகப் பணிகள்
முடங்கியுள்ளன.
இதையடுத்து, கடந்த ஆண்டு காலி பணியிடங்களுக்கு 300 பேர்
நியமிக்கப்பட்டனர். இருப்பினும், ஓராண்டிற்கு 200-க்கும் மேற்பட்டோர் பதவி
உயர்வு அல்லது பதவி ஓய்வு பெறுவதால் இந்தப் பணியிடங்கள் தொடர்ந்து
காலியாகவே உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக நோயாளிகளைக்
கையாளும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு
மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் நிர்வாக அலுவலர்
பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து நிர்வாகப் பணியாளர்கள் கூறியதாவது:
நிர்வாகப் பணிகளை நிர்வாகப் பணியாளர்கள் வெற்றிகரமாக
செய்தால்தான், மருத்துவமனையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். ஆனால்,
இங்கு ஒரு அலுவலர் மூன்று நபர்களின் வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.
மேலும், சில நேரங்களில் நிர்வாகப் பணிகளை மருத்துவர்களே மேற்கொள்ள அந்தந்த
மருத்துவமனை நிர்வாகம் நியமிக்கிறது. இதனால், மருத்துவர்கள் தங்களது சேவையை
விட்டுவிட்டு நிர்வாகப் பணிகளை செய்யும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற வேண்டிய பணி
நியமனங்களையும், பதவி உயர்வின் மூலம் செயல்படுத்த வேண்டிய நியமனங்களையும்
உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.








