கல்விக் கூடங்களில் மாணவர்
அமைப்புகள் என்ற பெயரில் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை அனுமதிக்கக்
கூடாது என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு
பாஜக சார்பில் மருந்து உள்ளிட்டவற்றை சனிக்கிழமை வழங்கிய அவர், பின்னர்
செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக
கூட்டணி போட்டியிடுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்துடன்
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆகவே, பேச்சுவார்த்தையில் இடம் பெற்றவை
குறித்து கட்சித் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கிய பிறகே கருத்துக்
கூறமுடியும்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் அமைப்பு என்ற பெயரில்
தேசவிரோத நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக ஏற்கெனவே புகார் எழுந்தது.
இதுகுறித்து ஐ.ஐ.டி.நிர்வாகத்திடம் நானே கூறியுள்ளேன். அப்போதே, மாணவர்
அமைப்பு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது காலதாமதமாகவே
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்
நாட்டின் பிரதமரையும், மத்திய அமைச்சரையும் தரக்குறைவாக விமர்சிப்பதை
அனுமதிப்பது நல்லதல்ல. கல்வி கற்க வந்தவர்கள், கல்வியை கற்கவேண்டுமே தவிர
மற்ற செயல்களில் ஈடுபடுவதை எப்படி அனுமதிக்க முடியும். ஆகவே, மத்திய அரசு
மாணவர் அமைப்புக்கு தடை விதித்திருப்பது சரியான முடிவுதான்.
காப்பீடுத் திட்டம், வங்கிக் கணக்குத் திட்டம் என
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை மத்திய பாஜக அரசு
செயல்படுத்தி வருகிறது என்றார்.







