கடந்த மாதம் 3–ந்தேதி நடந்த மருத்துவ நுழைவுத் தேர்வை நாடு முழுவதிலும் 6
லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். அரியானா மாநிலத்தில் தேர்வு
தொடங்கும் முன்பாகவே 44 மாணவர்கள் கேள்வித் தாள்களை முறைகேடாக பெற்று
தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.எனவே மருத்துவ நுழைவுத் தேர்வை
ரத்து செய்துவிட்டு, மீண்டும் நடத்தவேண்டும் என்று கோரி சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 3–ந்தேதி வழக்கை விசாரித்த
நீதிபதிகள் பிரபுல்ல சி.பந்த், அமிதவ ராய் ஆகியோர் முன்னிலையிலான விடுமுறை
அமர்வு நுழைவுத்தேர்வை நடத்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம் தேர்வு
முடிவுகளை வெளியிட 12–ந்தேதி வரை இடைக்கால தடை விதித்தனர்.
நேற்று
இந்த வழக்கு ஆர்.கே.அகர்வால், அமிதவ ராய் ஆகியோர் முன்னிலையிலான விடுமுறை
அமர்வு முன்பு மீண்டும் நடைபெற்றது. அப்போது, மத்திய பள்ளிக் கல்வி வாரியம்
சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித், ‘‘44 மாணவர்கள் செய்த
தவறுக்காக 6 லட்சத்து 30 ஆயிரம் பேரை மீண்டும் தேர்வு எழுத வைப்பது
சரியானதாக இருக்காது. தேர்வை மீண்டும் நடத்துவதால் வகுப்புகள் உரிய
நேரத்தில் தொடங்குவது தாமதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’’
என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் வருகிற 15–ந்தேதி(திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.







