அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு
ஜூலை 25–ந்தேதி நடைபெறும் என்று மத்திய பள்ளி கல்வி வாரியம்
அறிவித்துள்ளது.
நுழைவு தேர்வு ரத்து
மருத்துவ நுழைவு தேர்வை மே மாதம் 3–ந்தேதி நாடு முழுவதும் 6
லட்சத்து 30 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அரியானா மாநிலத்தில்
தேர்வு தொடங்கும் முன்பே 44 மாணவர்கள் கேள்வித்தாள்களை முறைகேடாக பெற்று
தேர்வை எழுதியது தெரியவந்தது.
எனவே மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து
செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரி சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு
ஏற்கனவே நடைபெற்ற நுழைவு தேர்வை ரத்து செய்து 4 வாரங்களுக்குள் மறுதேர்வை
நடத்த வேண்டும் என்று 15–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
மறு தேர்வு தேதி
இதையடுத்து மத்திய பள்ளி கல்வி வாரியம் 4 வார காலத்துக்குள்
மறுதேர்வை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், அந்த நேரத்தில் வாரியம்
மேலும் 7 தேர்வுகளை நடத்த வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் தேவை என்றும்
சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
அதன்படி நுழைவு தேர்வை
நடத்த கூடுதல் அவகாசம் அளித்த சுப்ரீம் கோர்ட்டு, விரைவில் மறுதேர்வை
நடத்தி ஆகஸ்டு 17–ந்தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று
உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் மத்திய பள்ளி கல்வி வாரியம் நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய அளவிலான மருத்துவம் மற்றும் பல்
மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு ஜூலை 25–ந்தேதி நடைபெறும் என்று
அறிவித்துள்ளது.
அறிக்கை
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:–
மறுதேர்வு
தொடர்பாக புதிய விண்ணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏற்கனவே
தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறு நுழைவுத்தேர்வில்
கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்து www.aimpmt.in என்ற
இணையதளத்தில் மேலும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்வில்
கலந்துகொள்பவர்கள் ஏற்கனவே அவர்களுடைய முந்தைய விண்ணப்பத்தில் அளித்த
மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் செல்போன் எண்களுக்கு மட்டுமே மறுதேர்வு
குறித்த தகவல்கள் அனுப்பப்படும். எனவே அந்த மின்னஞ்சல் முகவரி, செல்போன்
எண்களை உபயோகத்தில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







