20 மாணவர்கள் வரவில்லை:சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க அனைத்துப் பிரிவையும் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது.
காத்திருப்போர் பட்டியல்: கலந்தாய்வில் திங்கள்கிழமை பங்கேற்ற மாணவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை 428 மாணவர்கள் தேர்வு செய்தனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களை 134 மாணவர்கள் தேர்வு செய்தனர். சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பை 15 மாணவர்கள் தேர்வு செய்தனர்.
காலியிடங்கள்: இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் 710 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 433 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 69 பி.டி.எஸ். காலியிடங்கள் உள்ளன.
அனைத்துப் பிரிவினர்: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு கட்-ஆஃப் மதிப்பெண் 197-இல் தொடங்கி 196.50 வரை எடுத்துள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (ஜூன் 23) தொடர்ந்து நடைபெறுகிறது. உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக, கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இதுவரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 298 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
சென்னையில் நடைபெற்று வரும் கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 298 மாணவர்கள் எம்.பி.பி.பி.எஸ். படிப்பில் சேரத் தேர்வாகியுள்ளதாக, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பழைய மாணவர்களுக்கு எதிராக இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வழக்கு தொடுத்து, அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பழைய மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வழக்கு காரணமாக, எந்த மாணவருக்கும் இதுவரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
சென்னையில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 12 பழைய மாணவர்கள் பங்கேற்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரத் தேர்வாகியுள்ளனர்.
அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற கலந்தாய்வின்போது 161 பழைய மாணவர்கள், திங்கள்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற கலந்தாய்வின்போது 125 பழைய மாணவர்கள் என இதுவரை மொத்தம் 298 பழைய மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.








