மாநில பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக மாற்ற
வேண்டும் என்றும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை
நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐ.ஐ.டி.) மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம் போலவே, இந்த ஆண்டும் ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
கல்வியில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாடத்திட்டங்களில் பயின்றவர்கள் கூட குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் தான் இந்த பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 33 பேர் தேர்ச்சி
தேசிய அளவில் பார்க்காமல் மாநில அளவில் பார்த்தாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2815 பேர். இவர்களில் 451 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மத்திய இடைநிலைக்கல்வி வாரிய மாணவர்களில் 1045 பேர் இத்தேர்வை எழுதி அவர்களில் 418 பேர் அதாவது 40 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 1770 பேர் இத்தேர்வில் பங்கேற்று 33 பேர் அதாவது 1.66 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் எவ்வளவு மோசமான நிலைமையில் உள்ளது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்களே விளக்கும்.
நடவடிக்கை
இப்போதைய நிலையில், ஐ.ஐ.டி. போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி தமிழக மாணவர்களுக்கு சாத்தியமாக வேண்டுமானால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்திற்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும்.
அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை சிறந்த நிறுவனங்கள் மூலம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.